சூப்பர் ஸ்டார் படம்ன்னா முதல்ல போவீங்க, இந்த மாதிரி படங்களுக்கு போவீர்களா? - சமுத்திரக்கனி ஆதங்கம்
பள்ளி விழாவில் எமோஷனலாக நடிகர் சமுத்திரக்கனி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் நடிகர் சமுத்திரகனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் பேசிய சமுத்திரக்கனி, ஒரு சில கதைகளுக்காக இயக்குனராக நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது.
என்னுடைய கையில் கொஞ்சம் பணம் வந்துவிட்டால் அதை வைத்து மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்வேன். அப்படிதான் நான் எடுத்த படம் அப்பா, சாட்டை. இந்த மாதிரியான படங்கள் எல்லாம் உடனே ரசிகர்களிடம் கொண்டு போய் சேராது. நேரம் ஆகும். நீங்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார் படம் என்றால் தான் முதல் காட்சிக்கு போவீர்கள். இந்த மாதிரியான படங்களுக்கு எல்லாம் போவீர்களா? இந்த திரைப்படங்கள் எல்லாம் லேட்டாக டிவியில் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறதே என்று சொல்லி சென்று விடுவார்கள்.
விழாவில் சமுத்திரக்கனி:
இது போன்ற படங்களுக்கான உழைப்பு என்பது ரொம்பவே பெரிய விஷயம். கிட்டத்தட்ட 7 வருடங்கள் சேர்த்து வைத்திருந்த காசை வைத்து தான் நான் அப்பா படத்தை எடுத்தேன். ஆனால், அந்த படம் எனக்கு பெரிய நஷ்டத்தை தான் கொடுத்தது. அந்தப் படத்தின் மூலம் நான் எதையும் சம்பாதிக்கவில்லை. ஆனால், அந்த படத்தை எடுத்ததால் எனக்கு கிடைத்த மன நிறைவு, மன திருப்தியும் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்பவே கிடைக்காது. நஷ்டத்தை பற்றி எல்லாம் நான் கவலையும் படவில்லை.
சமுத்திரக்கனி சொன்ன அட்வைஸ்:
இந்த மாதிரியான வேலைகளை திரைத்துறையில் நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறோம். எப்போதும் நாங்கள் ஒன்று சேர்ந்தாலுமே இதை பற்றி தான் பேசுவோம். நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டோம் என்றால் அது எப்போது வேண்டுமானாலும் மரமாக மாறும். அப்படித்தான் நான் விதைக்கப்பட்டவன்.
குழந்தைகள் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். குழந்தைகளிடம் தவறு இருக்கிறது என்றால் அது பெற்றோர்களிடம் இருக்கும் தவறு, இல்லையென்றால் ஆசிரியர்களிடம் இருக்கும் தவறு. இங்கு மாற வேண்டியது குழந்தைகள் இல்லை, ஆசிரியர்கள் பெற்றோர்கள் தான் என்று கூறியிருக்கிறார்.
சமுத்திரக்கனி திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் நிறைந்த மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய அப்பா, போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சமுத்திரக்கனி நடித்த படங்கள்:
அதுமட்டுமில்லாமல் இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் நடிகராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருந்த படம் திரு.மாணிக்கம். இந்த படத்தில் நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து கடைசியாக சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ராமம் ராகவம் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து இவர் படங்களில் நடித்து வருகிறார்.