"இனி யாருக்காகவும் நான் மாற மாட்டேன்... என் கிரிக்கெட்டை என் வழியில் விளையாடுவேன்!" - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

"இனி யாருக்காகவும் நான் மாற மாட்டேன்... என் கிரிக்கெட்டை என் வழியில் விளையாடுவேன்!" - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

By S.Dhilip Kumar · 27/7/2026

'Rat Race'-ல் இருக்க விரும்பவில்லை

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய முடிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே மற்றவர்களுடன் போட்டி போட்டு ஓடுவதை நிறுத்திவிட்டதாகவும், இனி தனது வழியில் மட்டுமே கிரிக்கெட் விளையாடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு, "நம் நாட்டில் எப்போதும் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதில் நான் இருக்க விரும்பவில்லை. எனக்கு இப்போது 31 வயது. இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அதனால் இனி என் வழியில் விளையாட முடிவு செய்துள்ளேன். நான் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சஞ்சு சாம்சன் எப்படி விளையாட வேண்டும் என்பதை சஞ்சுவே முடிவு செய்வார்," என்றார்.

2028 உலகக் கோப்பை பற்றி யோசிக்கவில்லை

2026 உலகக் கோப்பையில் கூட இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காத நிலையில், 2028 குறித்து சிந்திப்பது தேவையில்லை என்றும் அவர் கூறினார். "2024 உலகக் கோப்பைக்கு பிறகு 2026 உலகக் கோப்பையில் நான் இருப்பேன் என்று கூட நினைக்கவில்லை. ஒருகட்டத்தில் 15 பேர் கொண்ட அணியில்கூட நான் இல்லை. அதனால் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. அணி என்னைத் தேவைப்பட்டால், நான் நன்றாக விளையாடினால் எல்லாமே தானாக நடக்கும்," என்று தெரிவித்தார்.

தன்னம்பிக்கை மாற்றிய வாழ்க்கை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய இன்னிங்ஸ்தான் தனது வாழ்க்கையை மாற்றியதாக சஞ்சு கூறினார். "அந்த இன்னிங்ஸுக்குப் பிறகு என்னை நானே நம்ப ஆரம்பித்தேன். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்கு முன்பும் பலர் ஆர்ச்சர் குறித்து எச்சரித்தார்கள். ஆனால் நான் அமைதியாக இருந்தேன். ஏனென்றால், ஒரு வருடத்திற்கு முன் இருந்த சஞ்சு வேறு; இப்போது இருக்கும் சஞ்சு வேறு என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன்," என்றார்.

'Form' வரலாம்... போகலாம்!

பார்ம் என்பது நிரந்தரமானது அல்ல என்றும், பொறுப்புணர்வே ஒரு வீரரை பெரிய இன்னிங்ஸ் ஆட வைக்கும் என்றும் அவர் கூறினார். "பார்மை எப்போதும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் பொறுப்பை உணர்ந்து விளையாட முடியும். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நான் கடைசி வரை நின்று இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை வழிநடத்தியது," என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full