"ஒரே நாளில் எல்லாமே மாறிவிடும்... இந்திய அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல!" - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

"ஒரே நாளில் எல்லாமே மாறிவிடும்... இந்திய அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல!" - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

By S.Dhilip Kumar · 21/7/2026

இந்திய அணியில் இடத்தை இழந்த தருணம் குறித்து சஞ்சு உருக்கம்

இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில், தனக்கு கிடைத்த வாய்ப்புகள், அதன் பிறகு இஷான் கிஷன் அணிக்குள் வந்த விதம் மற்றும் உலகக் கோப்பை கனவு எப்படி தகர்ந்தது என்பது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

"இஷான் வந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது"

சஞ்சு சாம்சன் கூறுகையில், "அப்போது இஷான் கிஷன் இந்திய அணிக்குள் வந்தார். அதற்கு முன்பு அவர் அணியில் கூட இல்லை. ஆனால் ஜார்கண்ட் அணிக்காக சையத் முஷ்தாக் அலி தொடரில் அபாரமாக விளையாடி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பிறகு இந்திய அணிக்கு வந்ததும் வேறு ஒரு லெவலில் பேட்டிங் செய்தார். அப்போது தேர்வாளர்களின் முன்னுரிமை பட்டியலில் அவர் என்னைவிட மேலே சென்றுவிட்டார் என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது," என்றார்.

உலகக் கோப்பை கனவு அங்கேயே முடிந்தது

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் போனதால், உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காது என்பதை அப்போதே புரிந்துகொண்டதாக சஞ்சு தெரிவித்தார். "நான் ஐந்து போட்டிகளில் 24, 6, 6, 10, 0 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தேன். அதன்பிறகு வந்த இஷான் 70-க்கும் மேல் ரன்கள் எடுத்தார். தொடரிலேயே சதமும் அடித்தார்.

அடுத்ததாக நேரடியாக உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார். அப்போது நல்ல பார்மில் இருக்கும் வீரருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்தது. உலகக் கோப்பை வாய்ப்பு எனக்கு முடிந்துவிட்டது. அமைதியாக அமர்ந்து மற்றவர்களுக்காக கைதட்டுவதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை," என்று அவர் கூறினார்.

"ஒரே நாளில் வாழ்க்கையே மாறிவிடும்"

இந்திய அணியில் விளையாடுவதன் மிகப்பெரிய சவாலே இதுதான் என்றும் சஞ்சு குறிப்பிட்டார். "இந்திய அணியில் ஒரே நாளில் எல்லாமே மாறிவிடும். அது இந்திய கிரிக்கெட்டின் தனிச்சிறப்பு. அதே விஷயம் எனக்கும் பிறகு நடந்தது. எனக்கு ஏழு போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தபோது, அதில் மூன்று சதங்கள் அடிப்பேன் என்று நானே நினைத்திருக்க மாட்டேன்," என்றார்.

நம்பிக்கை வந்த நேரத்தில் மீண்டும் ஏமாற்றம்

மூன்று சதங்கள் அடித்த பிறகு தனது இடம் உறுதியாகிவிட்டது என்று ரசிகர்கள் நினைத்தாலும், தனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை என்று சஞ்சு தெரிவித்தார். "மூன்று சதங்கள் அடித்த பிறகு எல்லோரும் 'இப்போது உன் இடம் உறுதியாகிவிட்டது' என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. நியூசிலாந்து தொடரில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தபோது, உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சி செய்தேன். ஆனால் ஐந்து போட்டிகளில் என் அதிகபட்ச ஸ்கோர் 24 ரன்கள்தான். அதன்பிறகு என் உலகக் கோப்பை கனவும் முடிந்துவிட்டது," என்று சஞ்சு சாம்சன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full