"தோனி, சிஎஸ்கே, ருதுராஜ்"... சென்னை அணிக்கு வந்ததற்கான உண்மையான காரணத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!

"தோனி, சிஎஸ்கே, ருதுராஜ்"... சென்னை அணிக்கு வந்ததற்கான உண்மையான காரணத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!

By S.Dhilip Kumar · 28/6/2026

சென்னை சூப்பர் கிங்ஸில் புதிய இன்னிங்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பல ஆண்டுகள் விளையாடி, கேப்டனாகவும் செயல்பட்ட சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணைந்தது கிரிக்கெட் உலகில் பெரும் பேசுபொருளானது. குறிப்பாக, சிஎஸ்கே அணியில் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக விளையாட அவர் ஏன் முடிவு செய்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்த நிலையில், சென்னை அணியில் இணைந்ததற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசிய சஞ்சு சாம்சன், அந்த முடிவின் பின்னணியில் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே அணியின் கலாச்சாரம் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர்தான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

"தோனியின் வழிகாட்டுதல் என்னை ஈர்த்தது"

"சிஎஸ்கே அணியின் தாக்கம், மஹி பாயின் (எம்.எஸ். தோனி) வழிகாட்டுதல், அதோடு என்னைப் போலவே யோசிக்கும் என்னுடைய நெருங்கிய நண்பர் ருதுராஜ் கெய்க்வாட்... இவர்கள் மூவரும்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு சிஎஸ்கே அணிக்கு செல்வதுதான் சரியான முடிவு என்று என்னை உறுதியாக நம்ப வைத்தார்கள்," என்று சஞ்சு சாம்சன் கூறினார்.

"கேப்டன்சி பற்றி நான் ஒருபோதும் யோசிக்கவில்லை"

சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு கேப்டன் பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றும் சஞ்சு சாம்சன் தெளிவுபடுத்தினார். "நான் ஏற்கனவே ஒரு அணியை வழிநடத்தி இருக்கிறேன். புதிய வீட்டுக்குள் வரும்போது எந்த நிபந்தனையும் விதிக்க முடியாது. சிஎஸ்கே என்னை நம்பி அழைத்திருக்கிறது. அந்த நம்பிக்கைக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.

"ருதுராஜ் ஒரு வித்தியாசமான சூப்பர் ஸ்டார்"

ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "ருதுராஜ் மிகவும் வித்தியாசமான இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார். அவர் பெரிய அணியின் கேப்டனாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். அமைதியாக இருப்பார். ஆனால், அவரைப் போன்ற தன்னம்பிக்கை கொண்ட வீரரை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். செயலால் நிரூபிப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். ருதுராஜ் அப்படிப்பட்டவர்," என்று பாராட்டினார்.

"ருதுராஜின் அணியில் விளையாட விரும்பினேன்"

மேலும், ருதுராஜுடன் பல ஆண்டுகளாக நல்ல நட்பு இருப்பதாக கூறிய சஞ்சு சாம்சன், "சிஎஸ்கே பற்றியும், அங்குள்ள சூழல் பற்றியும் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே ருதுராஜிடம் கேட்டிருந்தேன். அப்போது அவர் அந்த அணியின் கலாச்சாரம் மற்றும் சூழல் குறித்து என்னிடம் கூறினார். அப்போதே வாய்ப்பு கிடைத்தால் சிஎஸ்கே அணியில், அதுவும் ருதுராஜ் தலைமையில் விளையாட விரும்புகிறேன் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன்," என்று நினைவுகூர்ந்தார்.

சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு

சஞ்சு சாம்சனின் இந்தப் பேட்டி தற்போது சிஎஸ்கே ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. கேப்டன்சி குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், அணியின் வெற்றிக்காக முழுமையாக பங்களிப்பதே தனது இலக்கு என்று தெளிவுபடுத்தியிருப்பது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் - சஞ்சு சாம்சன் கூட்டணி சிஎஸ்கேவுக்கு மற்றொரு கோப்பையை வென்று தருமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full