"விராட் கோலியிடம் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்... உலகக் கோப்பை இறுதியில் அதுதான் என்னை காப்பாற்றியது!" - சஞ்சு சாம்சன்
"விராட் கோலியிடம் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்... உலகக் கோப்பை இறுதியில் அதுதான் என்னை காப்பாற்றியது!" - சஞ்சு சாம்சன்
விராட் கோலி கொடுத்த வாழ்க்கைப் பாடம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து தான் வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "விராட் பாய் மிகவும் நேர்மையானவர். இந்திய அணியின் முகாமில் நாங்கள் இருவரும் ஒன்றாக ஜிம்மில் பயிற்சி செய்தோம். அப்போது நான் அவரிடம் ஆலோசனை கேட்டேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாட வேண்டுமென்றால் வாழ்க்கை முறையே மாற வேண்டும் என்று அவர் கூறினார். உணவு, உடற்தகுதி, ஒழுக்கம் என அனைத்தையும் விளக்கினார். ஒரு வருடத்திற்கும் மேலாக அதை பின்பற்றினேன். பிறகு அதே ஒழுக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை," என்றார்.
உலகக் கோப்பை இறுதியில் கிடைத்த தெளிவு
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாட் பந்துகள் வந்தபோதும் பதற்றப்படவில்லை என்று சஞ்சு கூறினார்."சான்ட்னரின் ஒரு ஓவரில் நான்கு டாட் பந்துகளை சந்தித்தேன். ஆனால் அதற்காக பதற்றப்படவில்லை. பின்னர் வேறு பந்துவீச்சாளர்களை தாக்கலாம் என்ற தெளிவு இருந்தது. முன்பு இருந்த சஞ்சுவாக இருந்தால் ஐந்தாவது பந்திலேயே பெரிய ஷாட் அடித்து அவுட்டாகியிருப்பேன். ஆனால் அனுபவம் என்னை மாற்றியது," என்று அவர் தெரிவித்தார்.
'பும்ரா ஒரு Cheat Code'
இந்திய அணியின் வெற்றிக்கு ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். "பும்ரா ஒரு Cheat Code மாதிரி. அவர் இல்லையென்றால் இங்கிலாந்தை கடந்திருக்க முடியாது. இறுதிப்போட்டியிலும் அவர் கொடுத்த தொடக்கம் மிகவும் முக்கியமானது. இஷான் கிஷனும் சிறப்பாக விளையாடினார். ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை செய்ததால்தான் உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது. அந்த வெற்றியில் என்னுடைய பங்களிப்பும் இருந்தது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.