தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சந்தானம். இன்று சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குலு குலு. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் இவர்களுடன் இணைந்து பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இன்று வெளியாகி உள்ள சந்தானத்தின் குலு குலு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

Advertisement

கதைக்களம்:

படத்தில் அமேசான் காட்டில் பிறக்கிறார் கூகுள் (சந்தானம்). அங்கு ஏற்படும் பிரச்சினைகளின் காரணமாக தன்னுடைய தாயை இழக்கிறார் கூகுள். இதுமட்டுமில்லாமல் அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்கிறார். பின் கூகுள் இளைஞன் ஆனதும் சென்னையில் தனக்கென ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். கூகுள் யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் குணம் உடையவர்.

கூகுள் போகுமிடமெல்லாம் யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்கிறார். ஒருநாள் தங்களது நண்பன் கடத்தப்பட்டு விட்டான் என்று சில இளைஞர்கள் கூகுள் இடம் உதவி கேட்டு வருகிறார்கள். உடனடியாக கூகுளும் அவர்களுக்கு உதவி செய்ய புறப்படுகிறார். இந்த பயணத்தில் அந்த இளைஞர்களுடன் இணைந்து கூகுள் அந்த நண்பனை கண்டு பிடித்தாரா? இல்லையா? இந்த பயணத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

Advertisement

வழக்கம்போல் படங்களில் நகைச்சுவையில் கலக்கி வந்த சந்தானம் இந்த படத்தில் அதற்கு நேர்மாறாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எதார்த்ததுடன் கலந்த செண்டிமெண்ட், சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படும் விதம் என கதாபாத்திரத்துடன் ஒன்றி போய் இருக்கிறார் சந்தானம் என்றே சொல்லலாம். இளைஞர்களாக வந்த கவி, ஹரிஷ், யுவராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Advertisement

படத்தில் கதாநாயகியாக அதுல்யா சந்திரா நடித்திருக்கிறார். வழக்கம்போல் வில்லனாக ரசிகர்களை கவரும் வகையில் பிரதீப் ராவத் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் பிற நடிகர்களும் தனித்து காணப்படுகிறார்கள். மேலும், இயக்குனர் ரத்தினகுமாரின் கதைக்களம் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. பல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருந்தாலும் சில நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை.

படத்தின் முதல் பாதி சற்று தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்று இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல்ல இருக்கிறது என்று சொல்லலாம். படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ப்ரவீன் எடிட்டிங்கும் பக்காவாக வந்திருக்கிறது. ஆகமொத்தம் காசு கொடுத்து சென்ற ரசிகர்களுக்கு ஒரு நல்ல படமாக குலு குலு அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

நிறைகள் :

சந்தானத்தின் நடிப்பு சிறப்பு.

ரத்தினகுமார் இயக்கம் சூப்பர்.

இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றிருக்கிறது.

கிளைமாக்ஸ் தூள் கிளப்பி இருக்கிறது.

படத்தின் பிற நடிகர்களும் தங்களது கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

குறைகள் :

முதல் பாதி சலிப்பை தருகிறது.

சில இடங்களில் நகைச்சுவை ஒர்க்கவுட் ஆகவில்லை.

மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் சந்தானத்தின் குலு குலு – ரசிகர்களுக்கு விருந்து என்று சொல்லலாம்.

Advertisement