உங்கள் உரிமையை கேட்கலாம், ஆனால் ஆதாரம் இருக்கா? சந்தோஷ் நாராயணனின் அதிரடி பதிவு

By subhashini · 13/3/2026

ராப் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தெருக்குரல் அறிவு. இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியரும் ஆவார். இவர் பா. ரஞ்சித் கூட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த காலா படத்தில் உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி இருந்தார். இதன் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெயிடு மாஸ்டர் பாடலை எழுதி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடகராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இன்னொரு பக்கம் இவர் நிறைய ஆல்பம் பாடல்களை எழுதி இருக்கிறார். அந்த வகையில் இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ உடன் சேர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த பாடல் இருந்தது.

என்ஜாய் என்சாமி விவகாரம்:

இந்த பாடல் எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் இந்த பாடலை பாடிய தீ மற்றும் அறிவு ஆகியோருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த பாடலுக்கான அங்கீகாரம், ஊதியம் கொடுக்கவில்லை என்று ஐந்து ஆண்டுகளை கடந்தும் ராப் பாடகர் அறிவு கூறிக் கொண்டு வருகிறார். மேலும், இது தொடர்பாக அறிவு மீண்டும் தன்னுடைய ஆதங்கத்தை சொல்லி இருக்கிறார். அதில் அவர், இந்த பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய சொந்த பண்பாட்டு வரலாறு மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் நானே அந்த பாடலின் வரிகளை எழுதி முதன்மை மெட்டையும் அமைத்து பாடினேன். இசை என்பது ஒரு கூட்டு முயற்சி தான்.

அறிவு பதிவு

அதற்கான அங்கீகாரமும் ஊதியமும் நியாயமான முறையில் பகிர வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு பிறகு அந்த பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி வாங்கி இருக்கிறார்கள். ஆனால், என்னுடைய உழைப்பிற்கு எந்த ஊதியமோ அல்லது உரிமை வழங்கப்படவில்லை. இது அனுதாபத்திற்கான கோரிக்கை கிடையாது. இது அங்கீகாரம் உரிமைகள் மற்றும் உழைப்பின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை. சுயாதீன கலைஞர்களே உங்கள் படைப்புகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களை செய்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் பதிவு:

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாமே வழக்கம் போல வெறும் கற்பனை தான். அதில் துளியும் உண்மை இல்லை. நீங்கள் சொல்லும் கூற்றுகளுக்கும் உங்களிடம் ஆதாரம் இருந்தால் எடுத்து வரலாம். எங்கு வேண்டுமானாலும் எந்த ஊடகத்தில் வேண்டுமானாலும் அதை விவாதிக்கலாம். என்னை எல்லா இடங்களிலும் பிளாக் செய்து விட்டு இப்படி பேசுவதா? நீங்கள் இங்கேயே கூட பேசலாம். நான் பதிலளிக்க எப்போதுமே தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full