இந்தக் கதை எனக்கு பிடித்த காரணம் இது தான் - 'டூரிஸ்ட் பேமிலி' பட விழாவில் சசிகுமார் சொன்ன விஷயம்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் டிரைலர் விழாவில் நடிகர் சசிகுமார் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார்.
அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பட்டியல் இன மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போது என்னவெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் தான் இயக்கியிருக்கிறார்.
டூரிஸ்ட் பேமிலி படம்:
இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுடைய கஷ்டத்தை பேசும் படமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் பேசிய சசிகுமார், இந்தப் படத்தை படக்குழுவினரான நாங்களே பேசுவதை விட படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
https://www.youtube.com/watch?v=9sH1PoGOydc
விழாவில் சசிகுமார் பேசியது:
இந்த படத்தினுடைய தயாரிப்பாளர்கள் இருவருமே நண்பர்கள்தான். அந்த காரணத்தினாலே அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். கதை சொல்லும்போது இயக்குனர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டிருந்தேன். இருந்தாலுமே நான் இது போல ஒரு கதையை கேட்டு பல வருடம் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை தான் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் இயக்குனர் அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்.
இந்த படத்தில் எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடித்திருக்கிறார். அவர்களுக்குமே இந்த கதை ரொம்ப பிடித்திருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன் உடைய நடிப்பு எல்லோருக்குமே பிடிக்கும். மேலும், இந்த கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால், இந்த கதையினுடைய நாயகன் ஈழத் தமிழ் பேசுபவன்.
https://www.youtube.com/watch?v=BMWPcH281Ck
படம் பற்றி சொன்னது:
ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இந்தியாவிற்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பது தான் படத்தினுடைய கதை. இதை கொஞ்சம் காமெடியாக இயக்குனர் எடுத்திருக்கிறார். பொதுவாகவே ஈழத் தமிழர்களுடைய படம் என்றாலே சோகமும், வலியும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், இந்த படம் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், உள்ளுக்குள் ஒரு வலியும், விஷயத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம் படும் கஷ்டம் நம் அடுத்த தலைமுறையினர் படக்கூடாது, குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதனால் தான் அவர்கள் வலியை மறைத்து வாழ்கிறார்கள். இந்த படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்குமே பொருந்தும்.
https://www.youtube.com/watch?v=i1NzizBJE54
அரசுக்கு வைத்த கோரிக்கை:
உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இந்த படத்தை பார்க்கும்போது நம்முடைய கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் மறந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்10 பேருக்கு வந்தாலுமே வெற்றி தான். மேலும், இலங்கையில் இருந்து இங்கு வந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடி உரிமை வழங்குவதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. நம் மக்கள், நம் நாட்டில் அகதிகளாக இருக்கும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படத்தில் அதை பேசி இருக்கிறோம். இந்த படத்தை பார்த்த பிறகு அரசு முன்வந்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். அதுவே இந்த படத்தினுடைய வெற்றியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.