எப்படி இருக்கிறது GVP - GVM ன் 'Selfie' - முழு விமர்சனம் இதோ.

By Rajkumar · 1/4/2022

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஜீ.வி. பிரகாஷ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், பாடகர் என பல இல்லாமல் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படமும், சமீபத்தில் வெளிவந்த இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயில் படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் செல்பி.

இந்த படம் ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய ‘வி கிரியேசன்ஸ்’ மூலம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. மேலும், இன்று வெளியாகியுள்ள செல்ஃபி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதைப் பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் கல்லூரி மாணவனாக ஜி வி பிரகாஷ் நடித்து இருக்கிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். என்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் புரோக்கர்களை பற்றிய கதையாக செல்பி படம் அமைந்துள்ளது. படத்தில் கல்லூரியில் மாணவனாக இருக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் இந்த புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர்.

இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஹீரோவிற்கும் இடையே மோதல் உண்டாகிறது இறுதியில் ஹீரோ மற்றும் அவரது நண்பர்களுக்கு என்ன ஆனது? என்பதே செல்பி திரைப்படத்தின் மீதிக்கதை. முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் உடைய கதாபாத்திரம் தான் படத்தில் அதிகம் காட்டப்படுகிறது. சொல்லப்போனால் முதல் பாதியே அவரால் தான் ஓடியது என்று சொல்லலாம். வழக்கம் போல் ஜிவி பிரகாஷின் அலட்டிக்கொள்ளாத, அசால்ட்டான நடிப்பு மக்களை கவர்ந்து இருக்கிறது.

காலேஜில் மாணவரை சேர்க்க ஜிவி பிரகாஷ் செய்யும் வேலைகள் எல்லாம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் ஜோடியாக வர்ஷா நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரியதாக கதையில் முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும் வர்ஷா தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும், படம் ஆரம்பத்திலேயே என்ன கதை என்பதை காண்பித்து விடுகிறார்கள். படத்தில் ஹீரோ பில்டப் எல்லாம் எதுவும் இல்லாமல் கொண்டு சென்றது இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஒரு மெடிக்கல் சீட்டிற்கு தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் எவ்வளவு மதிப்பு என்பதை இந்த படம் உணர்த்துகிறது. பெரிய காலேஜில் தான் படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை புரிந்துகொண்டு அவர்களிடம் புரோக்கர்கள் செய்யும் வேலைகளை இயக்குனர் மதிமாறன் அழகாக காண்பித்திருக்கிறார். நீட் வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இந்த நீட்தேர்வு தனியார் கல்லூரிகளின் வசூல் வேட்டையில் இருந்து பெற்றோரை காப்பாற்ற உள்ளது என்பதே இந்த படத்தின் ஒன்லைன் கதை.
தற்போது படிப்பிற்காக நிலவும் பிரச்சினைகளை தெள்ளத்தெளிவாக இயக்குனர் காண்பித்திருக்கிறார்.

நிறைகள் :

படம் முழுவதையுமே ஜிவி பிரகாஷ் சுமந்து சென்றிருக்கிறார்.

வழக்கம்போல் அவருடைய நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இயக்குனர் கதை, திரைக்கதை கொண்டு சென்ற விதம் சிறப்பு.

நீட் தேர்வு குறித்தும் அதற்காக புரோக்கர்கள் செய்யும் வேலையை குறித்தும் அற்புதமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு, பின்னணி இசை பக்கபலம்.

குறைகள் :

காமெடி கொஞ்சம் இருந்திருக்கலாம்.

படம் முழுவதுமே ஹீரோ மேலே செல்கிறது.

இன்னும் கொஞ்சம் கதையில் வித்தியாசம் கொடுத்திருக்கலாம்.

மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மைனஸ் எதுவும் இல்லை.

குடும்பத்துடன் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் அனைவரும் சென்று சென்று பார்க்கும் படமாக செல்பி உள்ளது. கண்டிப்பாக கொடுத்த காசுக்கு வீண்போகவில்லை என்று சொல்லலாம்.

மொத்தத்தில் செல்பி - நிச்சயம் எல்லோர் மனதிலும் பதியும்.

behindtalkies AMP · Quick view
View full