அந்த வீடியோவால வெளியில தலைகாட்ட முடியல - வேதனையில் புலம்பிய சீரியல் நடிகர் துரைமணி
பொய்யான தகவலால் சீரியல் நடிகர் அவஸ்தைப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் துரைமணி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பாவம் கணேசன் என்ற தொடரில் நடித்திருந்தார். அதற்குப்பின் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் போன்ற தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் சீரியலுக்கு எடிட்டிங் ஸ்டுடியோ, டான்ஸ் கிளாஸ் போன்றவற்றையும் நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணின் போட்டோவை சோசியல் மீடியாவில் போட்டு 'இவர் தான் துரைமணியின் உண்மையான மனைவி' என்று பதிவிட்டிருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் மிக வைரலாகி இருந்தது. இதனால் நடிகர் துரைமணி ரொம்பவே நொந்து போயிருக்கிறார்.
துரைமணி பேட்டி:
இந்நிலையை தொடர்பாக அளித்த பேட்டியில் துரைமணி, இதற்கு முன்னாடி நானே இது போல் நிறைய வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். சீரியல் நடிகர்களை வைத்து இவங்க ரியல் ஜோடி என்று போடுவார்கள். ஆனால், அந்த தகவல் எல்லாம் உண்மையாக இருக்கும்போது யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இரண்டு நாட்கள் முன்னாடி என்னுடைய போனுக்கு நண்பர்கள் சிலர் வீடியோவை அனுப்பி இருந்தார்கள். அதை பார்த்த உடனே நான் ரொம்ப ஷாக் ஆகி விட்டேன். நான் விருகம்பாக்கத்தில் ஸ்டூடியோவையும், வடசென்னை பகுதியில் டான்ஸ் ஸ்கூலையும் நடத்தி வருகிறேன்.
வீடியோ சர்ச்சை:
டான்ஸ் ஸ்கூலை கவனித்துக் கொள்பவர் என்னுடைய தோழி தான். நானும் அவரும் பள்ளியில் ஒன்றாக படித்தோம். அவருக்கு கல்யாணம் ஆகி கல்லூரி போகும் வயதில் மகள் இருக்கிறார். என்னுடைய டான்ஸ் கிளாஸில் ஏதாவது பங்க்ஷன் நடக்கும் போது எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்திருப்போம். அப்படித்தான் அவங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து இருந்தேன். அது சோசியல் மீடியாவில் இருந்திருக்கு. அந்த போட்டோவை எடுத்து தான் 'இவர் மனைவி இவங்க தான்' என்று வீடியோ போட்டு இருக்காங்க. இதுல என்ன பெரிய கொடுமை என்றால், எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை.
தோழி குறித்து சொன்னது:
என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லோரும் அந்த வீடியோவை பார்த்துட்டு, இவன் சென்னையிலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்றெல்லாம் துக்கம் விசாரிப்பது போல போன் செய்து கேட்கிறார்கள். ஊர் பக்கமும் தலைகாட்டவே முடியவில்லை. இதைவிட கொடுமை என்றால், என்னுடைய தோழியின் நிலைமையை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. அவருடைய குடும்பம், குடும்பத்தினர் எல்லோருமே இந்த வீடியோவை பார்த்து, அவர்கள் மனசு என்ன பாடுபடும்? இரண்டு நாட்களாக அவங்களுமே பெரிய மனக்கஷ்டத்தில் இருக்கிறார்கள். இனிமேல் தொடர்ந்து அவர் என்னுடைய டான்ஸ் ஸ்கூலை கவனிப்பார்களா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
துரைமணி கோரிக்கை:
என்னுடைய வேலையை விடுங்க, அவர்களை பார்த்து நாலு பேர் என்ன நினைப்பார்கள். எதுவாக இருந்தாலும் நான் கடந்து போய் விடுவேன். ஆனால், அவர்கள் மீடியா தொடர்பில் இல்லாதவர். அதனால் அவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனால் அவர்கள் குடும்ப வாழ்க்கையும் பிரச்சனையில் போய் முடியுமோ என்ற பயமும் இருக்கிறது. இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்று சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய இந்த தகவலை பார்த்துட்டு, போட்ட வீடியோக்களை டெலீட் செய்து விட்டால் பிரச்சினை முடிந்துவிடும். அதையும் மீறி வீடியோ இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும் என்று கூறியிருக்கிறார்.