உத்தரவிட்ட முருகன், நண்பர்களுடன் இணைந்து சீரியல் நடிகை தீபா பாபு கட்டிய கோவில்- விவரம் இதோ

By Rajkumar · 3/9/2024

சீரியல் நடிகை தீபா பாபு கட்டியிருக்கும் கோவில் பற்றிய செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பான அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் தீபா பாபு. ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர் பின்னர் படிப்படியாக சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு முன்னேறினார். இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என எல்லா பிரபல சேனல்களின் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் 'ஆடுகளம்' என்னும் சீரியலிலும் நடிகர் தீபா பாபு கமிட் ஆகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடும்ப பிரச்சினை காரணமாக தீபாவின் பெயர் சோசியல் மீடியாவில் அடிபட்டது நாம் அறிந்ததே. இந்நிலையில், தீபா கட்டியிருக்கும் கோயில் குறித்த தகவல்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.

கோவில் கட்டிய தீபா:

அதாவது திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள, ஏலூர்பட்டி என்கிற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கோவில் கட்டியதில் நடிகை தீபாவின் பங்கும் உள்ளதாம். இதுகுறித்து தீபா, நான் ஒரு முருக பக்தை. எனக்கு முருகனைப் பார்க்கணும் போல் தோன்றினால் உடனடியாக அறுபடை வீடுகளுக்கோ அல்லது முருகன் குடி இருக்கிற வேறு கோயில்களுக்கோ கிளம்பி விடுவேன்.

View this post on Instagram

A post shared by Deepa babu (@deepababu90)

காசி விஸ்வநாதர் கோவில்:

மேலும், எனக்கு ஏதாவது சிக்கல், கஷ்டங்கள் வந்தால் முருகனைப் பார்க்க சென்று விடுவேன். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தாலே போதும் எனது பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இப்படி இருக்க, நான் ஒரு நாள் மாங்காடு காமாட்சி கோயிலுக்கு சென்று இருந்தேன் இருந்தேன். அங்குதான் முருகனின் பெயரில் உள்ள சுப்பிரமணி என்கிற சாமியாரைப் பார்த்தேன். அவர்தான், தொட்டியம் பக்கத்துல காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டு வருவதை எனக்குச் சொன்னார்.

கனவில் வந்த முருகர்:

அது மட்டும் இல்லாமல் காசி விஸ்வநாதர் ஆலயம் என்றாலும், ஆலயத்தில் உள்ளே முருகன் மற்றும் விநாயகருக்கு தனி தனி சன்னதிகள் அமைய இருக்கின்றது என்ற விஷயத்தையும் சொன்னார். அவரைப் பார்த்துட்டு வந்த சில நாட்களிலே, ' முருகனுக்கு கோவில் எழுப்ப நீ அங்கு போ' என்று எனக்கு தோணுச்சு. ஏற்கனவே நான் ஒரு முருகன் பக்தை என்பதால் முருகனே நேரில் வந்து சொன்ன மாதிரி எனக்கு இருந்தது. அதனால் அடுத்த நாளே அந்த ஊருக்கு கிளம்பி போய் விட்டேன்.

கோவில் கும்பாபிஷேகம்:

ஒரு கோயில் கட்டுவது என்றால் சும்மா கிடையாது. அந்த ஊர் மக்கள், சாமியாருக்கு தெரிஞ்சவங்க, எனக்கு தெரிஞ்சவங்க என எல்லாரும் சேர்ந்து வேலைகளை செய்தோம். இப்போ எல்லா வேலைகளும் நல்லபடியா முடிஞ்சு, கும்பாபிஷேகம் நடக்கப்போகிறது. இந்த நல்ல விஷயத்தில், 'மெட்டி ஒலி' வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, நடிகர் அழகப்பன் ஆகியோருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நான் கோவில் குறித்த விஷயம் சொன்ன உடனே அவங்களும் ஆர்வத்தோடு இந்தப் பணியில் சேர்ந்துட்டாங்க என்று நடிகை தீபா நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full