10 வருஷம் ஆகியும் குழந்தை இல்லையா? நீங்க வளர்க்க போறீங்களா - குழந்தை பற்றிய கேள்விக்கு சாந்தனு-கிகி சொன்ன பதில்
குழந்தை பற்றிய சர்ச்சைகளுக்கு சாந்தனு-கிகி கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சாந்தனுவும் ஒருவர். இவரது தந்தை பாக்கியராஜால் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். தற்போது பிரபலமான நடிகராக சாந்தனு இருக்கிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை.
இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தார்கள். அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் கொச்சையாக பேசாமல் மிகவும் தன்மையாகவே பதில் அளிப்பார் சாந்தனு. மேலும், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து வந்தாலும் வெற்றி படத்திற்காக போராடி வருகிறார் சாந்தனு.
சாந்தனு குறித்த தகவல்:
அந்த வகையில் கடைசியாக சாந்தனு நடித்து இருந்த ப்ளூ ஸ்டார் படம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் வெளியாகி இருந்தது. தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் ஃபேன் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சாந்தனு பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
சாந்தனு-கிகி திருமணம்:
பள்ளி படிக்கும்போதிலிருந்தே கீர்த்தி- சாந்தனு இருவருமே காதலித்து வந்தார்கள். பின் இவர்களுடைய காதலுக்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்தார்கள். அதற்குப் பின் 2015 ஆம் ஆண்டு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் இருவருமே தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், கல்யாணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகியும் இருவருக்குமே குழந்தை இல்லை. இது குறித்து சோசியல் மீடியாவில் அடிக்கடி கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
https://www.youtube.com/shorts/3cbaXCzWsfs
சாந்தனு-கிகி பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சாந்தனு- கீர்த்தி ஜோடி, உண்மையிலேயே எங்கள் மீது அக்கறை வைத்து பலரும் எங்கள் குழந்தையை பற்றி கேட்கிறீர்கள். ஆனால், சிலர் கேட்க வேண்டும் என்பதற்காகவே கேட்கிறார்கள். குழந்தை எப்போது என்றெல்லாம் நக்கலாகவும் சொல்கிறார்கள். இன்னும் உங்களுக்கு குழந்தை இல்லையா? உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் சொல்கிறார்கள். இது எந்த அளவிற்கு எங்களை பாதிக்கும் என்று யோசிக்க மாட்டுகிறார்கள். நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
குழந்தைக்கான பதிலடி:
குழந்தை பெற்ற பின்பு நீங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள பேபி சிட்டராக வருவீர்களா? நாங்கள் பேசுவதை ரூடாக, திமிராக பேசுகிறோம் என்று நினைக்க வேண்டாம். எங்களுடைய மனநிலமையும் எந்த மாதிரியான சூழ்நிலை நாங்கள் எதிர் கொள்கிறோம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது. கடவுள் எங்களுக்கு எப்போது குழந்தை கொடுக்கிறாரோ
அப்போது அது நடக்கட்டும். உண்மையாக எங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கு ரொம்ப நன்றி என்று கூறி இருக்கிறார்கள்.