'சிகிச்சை முடிந்து மீண்டும் வருவேன்' - அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன் கண்கலங்கிய நடிகர் சிவராஜ்குமார்
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த பழம்பெறும் கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான டாக்டர் ராஜ்குமாரின் மகன் தான் சிவராஜ்குமார். 62 வயதாகும் இவர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அதேபோல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் கவர்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு, தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர்.
முதலில், 1974 ஆம் ஆண்டு ‘ஸ்ரீ சீனிவாசா கல்யாணம்’ என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின் 1986 ஆம் ஆண்டு ‘ஆனந்த்’ என்கிற 1986 திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வென்ற இவர், தொடர்ந்து அதிரடி ஆக்சன் நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
சிவராஜ்குமார் குறித்து :
மேலும், கடந்த சில வருடங்களாக இவர் கன்னட திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களில் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக நரசிம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார். அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு ‘தளபதி 69’ திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
பயரதி ரணகல் :
கடைசியாக சிவ ராஜ்குமார் நடிப்பில் 'பயரதி ரணகல்' என்கிற கன்னட படம் வெளியானது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பேட்டிகளில், சிவராஜ்குமார், தனக்கு உடல் ரீதியான பாதிப்பு இருப்பதாகவும், அது குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி அச்சப்படுத்த விரும்பவில்லை என்றும், சிகிச்சைக்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறியிருந்தார். இவர் அமெரிக்காவில் உள்ள மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெற இருக்கிறார் எனவும் கூறப்பட்டது. இப்படி அவர் கூறியது இணையத்தில் பயங்கரமாக வைரலான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அமெரிக்காவுக்கு சிகிச்சை:
இந்நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள அவர் முன்னதாக அளித்த பேட்டியில், எனக்கு சிகிச்சை அளிக்க இருக்கும் மருத்துவர் பெயர் முகேஷ் என் மனோகர். பிரபலமான புற்றுநோய் நிபுணர் நான் அவரிடம் பேசியபோது, அவர் எதற்கும் கவலைப்பட வேண்டாம், எந்த சிக்கலும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று உறுதி அளித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களில் இதயத்துடிப்பு, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என நாங்கள் எடுத்த அனைத்து டெஸ்ட்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட் தான் வந்திருக்கிறது.
ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்:
அதனால் இந்த டெஸ்ட் முடிவுகள் எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நான் ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்தியா திரும்புவேன். வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நான் இந்தியாவில் இருப்பேன். நிச்சயமாக திரும்பி வருவேன். என்னுடன் எனது மனைவி கீதா, இளையமகள் நிவேதா ஆகியோர் வருகிறார்கள். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என் மீது அன்பு வைத்து ஆதரவாக இருக்கும் நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இந்தச் செய்தியை கண்ணயதோடு கையாண்ட ஊடகத்துக்கும் எனது நன்றி என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.