12 ஆண்டுகள் கழித்து சீரியல் நடிகர் ஸ்ரீக்கு கிடைத்த மாநில விருது - அதுவும் எந்த தொடருக்கு தெரியுமா ?
12 வருஷம் கழித்து நடிகர் ஸ்ரீ வாங்கி இருக்கும் மாநில விருது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுகளான விருதுகள் கொடுக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் இந்த விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே சென்றது. மேலும், விருது பெறுபவர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் விருதுகளை வழங்க இருக்கிறார். இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த கதாநாயகன் என்ற பிரிவில் விருதை இரண்டு சீரியல்களில் நடித்ததற்காக நடிகர் ஸ்ரீகுமார் வாங்கி இருக்கிறார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகனாவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து இவர் கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளைநிலா, தலையணை பூக்கள், யாரடி நீ பிள்ளைநிலா, போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், ஸ்ரீ குமார் சீரியல் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் வானத்தைப்போல என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீ குமாருக்கு சிவசக்தி மற்றும் உறவுகள் ஆகிய தொடரில் ஹீரோவாக நடித்ததற்கு மாநில விருது தற்போது கிடைத்து இருக்கிறது. இது குறித்து நடிகர் ஸ்ரீராம் கூறியிருந்தது, சிவசக்தி சீரியல் முடிந்து 12 வருடம் ஆகிவிட்டது. குறிஞ்சி பூ பூக்குற மாதிரி இந்த விருது இப்போ எனக்கு கிடைத்திருக்கிறது உண்மையிலேயே ஜீசஸ்க்கு நன்றி சொல்லியே ஆகணும்.
அரசு வழங்கும் போது அந்த விருதுக்கு ஒரு தனி மரியாதை, கெளரவம் இருக்கு. இன்று இந்த விருதுகளை வாங்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மேலும், இந்த நிகழ்ச்சியிலேயே இரண்டு சீரியலுக்கு விருது வாங்கிய ஒரே நடிகர் நான் மட்டும் தான். சிவசக்தி மற்றும் உறவுகள் ஆகிய ரெண்டு தொடர்களில் நடித்ததுக்காக சிறந்த கதாநாயகன் விருதை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இரண்டு சீரியல்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் சன் டிவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக சீரியல்களை சிறந்தது என்றும், அதில் நடிக்கிற ஆர்டிஸ்ட் தான் பிரபலம் ஆகிறார்கள் என்பது ஒரு தவறான கணிப்பு. இது இன்னைக்கும் இங்கு இருக்கு. அப்படி இல்லை என்பதை எனக்கு தரப்பட்ட விருதுகள் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். உறவுகள் தொடர் காலை 11:30 மணிக்கும், சிவசக்தி 10 மணிக்கும் ஒளிபரப்பாகி இருந்தது. அதனால் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடித்து வரும் ஆர்ட்டிஸ்ட்களுக்கு எனக்கு கிடைத்த இந்த விருதுகள் புதிய நம்பிக்கையை நிச்சயம் தரும் என்று நான் நம்புகிறேன் என்று கூறி இருந்தார்.