"45 ஓவர் வரை போட்டி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது... கடைசி 3 ஓவர்கள்தான் தோல்வியை தீர்மானித்தது!" - சுப்மன் கில்
"45 ஓவர் வரை போட்டி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது... கடைசி 3 ஓவர்கள்தான் தோல்வியை தீர்மானித்தது!" - சுப்மன் கில்
45 ஓவர் வரை இந்தியா போட்டிக்குள் இருந்தது
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இருப்பினும், இந்தப் போட்டியில் 45-வது ஓவர் வரை இந்தியா வெற்றி வாய்ப்புடன் இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், "45-வது ஓவர் வரை நாங்கள் போட்டிக்குள் இருந்தோம். ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதுதான் போட்டியை எங்களிடமிருந்து பறித்துவிட்டது" என்று கூறினார்.
திட்டம் சரியாக இருந்தது... ஆனால் முடிக்க முடியவில்லை
388 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, ஆரம்பம் முதலே திட்டமிட்டு விளையாடியதாக கில் கூறினார். "40 ஓவர் வரை விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதே நேரத்தில் ரன் ரேட்டிலும் அதிகம் பின்தங்கக் கூடாது என்பதால், ஓவருக்கு 6 முதல் 6.5 ரன்கள் வரை எடுத்துக்கொண்டு, கடைசி 10 ஓவர்களில் வேகமாக ரன்கள் சேர்க்க நினைத்தோம். அந்தத் திட்டம் ஒரு கட்டம் வரை சரியாகவே சென்றது. ஆனால் அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை," என்றார்.
பந்துவீச்சில்தான் பெரிய தவறு
இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக போராடியதாக கூறிய கில், பந்துவீச்சில்தான் அணி அதிகம் தடுமாறியதாக ஒப்புக்கொண்டார். "இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட அனைவருமே ரன்கள் எடுத்தனர். அது நல்ல விஷயம். ஆனால் முதல் பவர்பிளேயில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீசவில்லை. இங்கிலாந்து அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது. டெத் ஓவர்களிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததால் அவர்கள் எட்ட முடியாத இலக்கை எங்களுக்கு நிர்ணயித்தனர்," என்று தெரிவித்தார்.
ரோஹித், கோலிக்கு பாராட்டு
மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பங்களிப்பையும் சுப்மன் கில் பாராட்டினார். "ரோஹித்தும், விராடும் பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு மைதானங்களில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடியவர்கள். குறிப்பாக இந்தப் போட்டியில் ரோஹித் பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. போட்டியின் இறுதியில் ஆடுகளம் மெதுவாக மாறியதால் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. இருந்தாலும் அவர் சிறப்பாக விளையாடினார். அதை பார்ப்பதே ஒரு விருந்தாக இருந்தது," என்றார்.
தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டிய இந்தியா
தொடரை இழந்த ஏமாற்றம் இருந்தாலும், இந்திய அணி பேட்டிங்கில் நல்ல அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதாக சுப்மன் கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் பந்துவீச்சை மேம்படுத்தினால் மட்டுமே வெளிநாட்டு மண்ணில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த தோல்வி இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த தொடர்களில் இதுபோன்ற தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு வருவதே அணியின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.