10 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் - ஜெய் பீம் மணிகண்டன் குறித்து சின்மயி போட்ட பதிவு

By subhashini · 10/5/2023

நடிகர் மணிகண்டனை புகழ்ந்து பாடகி சின்மயி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனாக திகழ்பவர் மணிகண்டன். இவர் ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்து ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பின் இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் மணிகண்டன். இருந்தாலும், இவர் தனிப்பட்ட முறையில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி மணிகண்டன் அலைந்தார். பின் உதவி இயக்குனராக மணிகண்டன் சினிமாவில் நுழைந்தார். இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியனார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது. அதன் மூலம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் மணிகண்டன்.

மணிகண்டன் நடித்த படங்கள்:

அதற்கு பின் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இவருக்கென ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொண்டார். பின் இவர் படங்களில் அழுத்தமான ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக மாறினார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த ஜெய் பீம் படத்தில் ராஜக்கண்ணாகவே மக்கள் மத்தியில் வாழ்ந்து விட்டார் மணிகண்டன். இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் கவனம் இவர் மீது ஜெய் பீம் படத்தின் மூலம் திரும்பியது.

குட் நைட் படம்:

தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் நைட். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. மேலும், படத்தின் ப்ரோமோஷனுக்காக பட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல குரலில் பேசிய மணிகண்டன்:

அந்த வகையில் தற்போது குட்நைட் பட குழுவினர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் கதாநாயகன் மணிகண்டன் சினிமா நடிகர்களை போல் மிமிக்கிரி செய்து அசத்தியிருக்கிறார். முதலில் அவர் அஜித் போல் மூன்று வகையில் பேசி இருக்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் கிஷோர் போல் பேசி இருக்கிறார். அதன் பின் தமிழ் சினிமாவின் மிரட்டும் வில்லனாக இருந்த ரகுவரன் போல் பேசி இருக்கிறார். இப்படி மணிகண்டன் பேசிருப்பது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்மயி பதிவு:

மேலும், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து சின்மயி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து மணிகண்டன் உடனான நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், மணிகண்டன் பல திறமைகளை கொண்டவர். அவர் அதிகமாக கொண்டாடப்பட வேண்டும். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய ப்ளூ எலிபன்ட் என்ற நிறுவனம் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி வீடியோக்களுக்கு மொழிபெயர்ப்பு, டப்பிங் போன்ற பணிகளை செய்து கொடுத்து வந்தோம். கடும் பணி நெருக்கடியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக உறக்கம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருந்தோம். எங்களுடன் இருந்த மூவர் குழுவில் மணியும் ஒருவர். பயிற்சி வீடியோவில் வயதான பஞ்சாபி முதியவர் உட்பட அனைவருக்கும் குரல் கொடுத்து எங்களை அசத்தி விட்டார் மணிகண்டன். உறக்கம் இல்லாமல் பணியாற்றிய அந்த நாளில் பணியை மகிழ்ச்சிகரமாக மாற்றியது மணி தான் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full