'அவருக்கு ரிலேஷன்ஷிப்ஸ் கிடையாது' - ரஹ்மான் குறித்து பிரபல பாடகர் பகிர்ந்த விஷயம்
பிரபல பாடகர் சோனு நிகம் ஏ. ஆர். ரஹ்மான் குறித்து கூறியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை புயலாக கருதப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவரின் உண்மையான பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில், மதகுரு காத்ரி இஸ்லாமின் வழிக்காட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறுவயதில் இருந்த இசையில் அதிக ஆர்வம் உண்டாம்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது சிறுவயதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வொண்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் நான்கு கீ போர்ட்கள் வாசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே கனவு கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான், இசை மீது இருந்த ஈடுபாடால் தனது 15 ஆம் வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
ஏ. ஆர். ரஹ்மான் குறித்து :
பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ மலையாளத்தில் திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹீட் ஆனதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ஆஸ்கார் நாயகன் :
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கடந்த வரும் ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு இசை அமைத்ததற்காக இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ கிடைத்தது நாம் அறிந்தவையே. சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் பிசியான இசையமைப்பாளராக ஏ. ஆர். ரஹ்மான் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், ரஹ்மானுடன் பணிபுரிந்த பாடகரும் இசையமைப்பாளருமான சோனு நிகம், ரஹ்மான் நட்பாகப் பழகக் கூடியவர் அல்ல என்று கூறி இருக்கிறார்.
சோனு நிகம் பேட்டி:
அதாவது, சமீபத்தில் O2 இந்தியா என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர், ரஹ்மானுக்கு ரிலேஷன்ஷிப்ஸ் கிடையாது. அவர் யாருடனும் மனம் திறந்து பேச மாட்டார். இதுவரை நான் அப்படி அவரை பார்த்ததில்லை. தன்னை திலீப் என்று அறிந்த பழைய நண்பர்களிடமே அவர் மனம் திறந்து பேசுகிறார். மேலும், அவர் நட்பாகப் பழகக் கூடியவர் அல்ல. தொழுகைச் செய்வார். யாரிடமும் தவறாக நடந்து கொள்ள மாட்டார். யாரையும் புண்படுத்தவோ, தவறாகப் பேசவோ மாட்டார் என்று கூறி இருக்கிறார்.
ரஹ்மான் இப்படிப்பட்டவர் தான்:
அதோடு அவர் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியே இருப்பார். யாரையும் தன்னிடம் நெருங்க விட மாட்டார். அப்படிதான் இருக்க வேண்டும். மேலும், அமெரிக்காவில் ஒரு சுற்றுப்பயணத்தின் போது அவர் மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்திருக்கிறேன். அவருக்கு கிசுகிசுக்கக் கூட தெரியாது. ஆனால், அது பெரிய குறை ஒன்றும் இல்லையே. அவர் அப்படிதான். என்னைப் பற்றியோ, வேறு யாரைப் பற்றியோ அவர் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அதேபோல், மற்றவர்களையும் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பியதில்லை. அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்று ரஹ்மானை சோனு நிகம் புகழ்ந்து பேசி இருக்கிறார்.