ஹீரோவாக களமிறங்கும் சிவாஜியின் பேரன் , வாழ்த்து சொல்லிய நடிகர் ரஜினிகாந்த் - வெளியான சுடச்சுட அப்டேட்

By subhashini · 11/11/2025

சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் சிவாஜி பேரன் தர்ஷன் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக கொடி கட்டி பறந்திருந்தவர் சிவாஜி கணேசன். இவருடைய நடிப்பிற்கு இன்றும் யாருமே நிகரில்லை என்று தான் சொல்லணும். அந்த அளவிற்கு சிவாஜி தன்னுடைய நடிப்பின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரின் வம்சாவளியாக பிள்ளைகள் நடித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

அந்த வகையில் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரும் சினிமாவில் தான் இருக்கிறார். இவருடைய மூத்த மகன் துஷ்யந்த் சில படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவருடைய இன்னொரு மகன் தான் தர்ஷன். தற்போது இவர் தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக திரு. செந்தில் தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன் மற்றும் திரு. சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

சிவாஜி பேரன் படம்:

அனைவரும் எதிர்பார்க்கும் புதிய படைப்பாக “லெனின் பாண்டியன்” (Lenin Pandiyan) தற்போது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், இப்படத்தின் நாயகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் தர்ஷன் கணேசன் அவர்களின் வரவிருக்கும் “லெனின் பாண்டியன்” திரைப்படத்துக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை வழங்கினார். இந்நிகழ்வில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் திரு. டி. ஜி. தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன், மேலும் திரு. ராம் குமார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

படம் குறித்த தகவல்:

“லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளராக திகழும் கங்கை அமரன் நடித்துள்ளார். மேலும், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வருகிறார். இவர்களுடன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரஜினி வாழ்த்து:

திரைப்படத்தின் இசையை திறமையான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருவாக்குகிறார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்துக்கு ஆத்தூரி ஜேகுமார், ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கலைமாமணி தளபதி தினேஷ், மற்றும் நடன வடிவமைப்புக்கு விஜயா மாஸ்டர் பொறுப்பேற்றுள்ளனர். படத்தின் பி.ஆர். நடவடிக்கைகளை சதீஷ் (AIM) மேற்கொள்கிறார். மேலும், இந்த படம் தொடர்பாக தர்ஷன், ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full