'ஏ.வி.எம் ராஜனுடனான காதல்' - பழம்பெரும் நடிகை புஷ்பலதா குறித்த நினைவுகளைப் பகிர்ந்த இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்
பழம்பெரும் நடிகை புஷ்பலதா குறித்த நினைவுகளை இயக்குனர் எஸ் பி முத்துராமன் பகிர்ந்திருக்கும் செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை புஷ்பலதா 'கொங்கு நாட்டு தங்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவர் சாரதா, பார் மகளே பார், நானும் ஒரு பெண், யாருக்கு சொந்தம், தாயே உனக்காக, கற்பூரம், ஜீவனாம்சம், தரிசனம் என 100க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களில் நடிகை புஷ்பலதா நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'நான் அடிமை இல்லை' என்ற படத்தில் ரஜினிக்கு மாமியார் கதாபாத்திரத்தில் வில்லியாக அசத்தியிருந்தார்.
நடிகை புஷ்பலதா குறித்து:
இதற்கிடையே, இவர் 'நானும் ஒரு பெண்' திரைப்படத்தில் ஏ.வி.எம் ராஜனுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகு இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவரின் பெயர் மகாலட்சுமி. அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பலதா மறைவு:
இந்நிலையில் 87 வயதாகும் புஷ்பலதா சமீபத்தில் வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தற்போது புஷ்பலதாவின் மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்றும், சமூக வலைதளப் பக்கங்களிலும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் புஷ்பலதா குறித்து சில நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
எஸ்.பி.முத்துராமன்:
எஸ்.பி. முத்துராமன் கூறுகையில், 'ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் திருலோகசுந்தர் இயக்கிய 'நானும் ஒரு பெண்' திரைப்படம் மூலம் தான் ராஜன் அறிமுகமானார். அதிலிருந்து தான் அவரை எல்லோரும் ஏ.வி.எம்.ராஜன் என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பட்டத்தின் நாயகி புஷ்பலதா. இந்த படத்திற்கு முன்னரே அவர், பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 'நானும் ஒரு பெண்' படத்தில் புஷ்பலதா மாலதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ராஜனுக்கும் புஷ்பலதாவுக்கும் இந்த படத்தில் தான் காதல் மலர்ந்தது.
திறமையான நடிகை:
அதன் பின், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும், நடிகை புஷ்பலதா கதாநாயகியாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனது இயக்கத்தில் 'ஊருக்கு உபதேசம்', 'சகலகலா வல்லவன்' என சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் மிகவும் திறமையான நடிகை. அவரிடம் பணியாற்றியது இனிய தருணங்கள். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.