சென்னையில் உள்ள சாலைக்கு தந்தையின் பெயர், முதல்வருக்கு நன்றி தெரிவித்து SPB சரண் வெளியிட்ட வீடியோ
தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து எஸ்பிபி சரண் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை என அனைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர்.
இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். அதோடு இவர் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றவர். மேலும், இவர் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் என தொடங்கி தற்போது பிரபலமாக இருக்கும் அனிருத் வரை அனைத்து இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார். பின் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த எஸ்பிபி உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தார்.
எஸ்பிபியின் இறப்பு :
இவரின் இறப்பு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலருக்கும் பேரதிர்ச்சி. பின் எஸ்பிபியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், சமீபத்தில் எஸ்பிபியின் நாலாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். இதை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பிபி வாழ்ந்த காம்தார் நகருக்கு, 'எஸ்பி பாலசுப்ரமணியம் நகர்' என்று பெயரை மாற்ற வேண்டும் என்று அவருடைய மகன் சரண் அவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தார்.
சரண் வைத்த கோரிக்கை:
சரண் மனுவை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர் வைத்து அறிவித்திருக்கிறார். பின் இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தன்னுடைய இனிய குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழையை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், படங்களில் நடித்தும், பல துறையில் வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25-9-2020 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் அவர் நீங்கா இடம் பெற்றவர். அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எஸ்பிபி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
மறைந்த பாடகர்
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) September 25, 2024
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, அவர் வாழ்ந்த காம்தார் நகர் மெயின் ரோட்டுக்குகு
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.பி.பி.சரண் மனமார்ந்த pic.twitter.com/PTxGBcoU6Z
நன்றி தெரிவித்த சரண்:
அதில், என்னுடைய குடும்பத்தினர் சார்பில் அரசுக்கு வைத்த கோரிக்கையை இரண்டு நாட்களிலேயே நிறைவேற்றிக் கொடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. பலரும் முதல்வர் செயலை பாராட்டி வருகிறார்கள்.