தப்பு செஞ்சவங்களே மன்னிப்பு கேட்கல, ஆனா விஜய் - தவெகவில் இணைந்த ஸ்நோலின் அம்மா உருக்கம்

By subhashini · 10/11/2024

தமிழக வெற்றிக் கழகத்தில் ஸ்டெர்லைட்டில் பாதிக்கப்பட்ட குடும்பம் இணைந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே. இது தமிழகம் மட்டுமில்லாமல் தேசியளவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இதில் ஸ்நோலின் என்ற இளம் பெண்ணுமே இறந்தார். இவரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் சொல்லியும் நிதி உதவியும் செய்திருந்தார். தற்போது விஜய், கட்சியை தொடங்கி மாநாடு முடித்தவுடன் ஸ்நோலின் அம்மா உட்பட அவருடைய மொத்த குடும்பமே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஸ்நோலின் உடைய அம்மா வனிதா அளித்த பேட்டியில், ஸ்நோலின் இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் எங்களால் துக்கம் தாங்க முடியவில்லை.

ஸ்நோலின் அம்மா பேட்டி:

நாங்கள் வீட்டு வாசலில் இடிந்து போய் இருந்தோம். அந்த நடு ராத்திரியில் தான் விஜய் ஒரு மோட்டார் பைக்கில் எங்கள் வீட்டுக்கு வந்தார். நேரம் ஆகிவிட்டது , இரவு நேரத்தில் வந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா என்று சொன்னார். தப்பு செஞ்சவங்களுக்கெல்லாம் அந்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருக்கும்போது விஜய் தம்பி மன்னிப்பு கேட்டதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நீங்கள் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் தம்பி.

விஜய் குறித்து சொன்னது:

எங்களுடைய துக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க வந்ததே ரொம்ப மன நிறைவாக இருக்கு என்று சொன்னேன். பின் உட்கார சேர் போட்டதற்கு கூட அவர் கீழே தான் உட்கார்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய அன்பு பாசத்திற்காக தான் நாங்கள் விஜய் தம்பி தொடங்கி இருக்கிற கட்சியிலேயும் சேர்ந்து இருக்கிறேன். விஜய் உடைய மாநாட்டுக்கு எங்க ஊரு ஆளுங்களுடன் நானும் போய் போயிட்டு வந்தேன். அவரை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

விஜய் மாநாடு:

அங்கு லட்சக்கணக்கான மக்கள் இருந்ததால், அந்த கூட்டத்தை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு செல்வாக்குள்ள ஒரு புள்ள நம்ம வீட்டுக்கு அவ்ளோ எளிமையாக வந்துட்டு போனாரு என்று நினைத்து அவர் மேல் இன்னும் மரியாதை வந்தது. என்னுடைய மகள் ஸ்நோலினுக்கு நடந்தது ஒரு வன்முறை. அவள் இறந்து ஏழு வருஷம் ஆகப்போகுது. அவள் இருந்திருந்தால் கல்யாணம் பண்ணி பேரன் , பேத்தி எல்லாம் பார்த்திருப்பேன். எங்க குடும்பமும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கும்.

தவெக கட்சி:

எங்கள் குடும்பத்திற்கு நடந்தது வேறு யாருக்குமே நடக்கக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் நான் நினைக்கிறேன். ஆனால், அதுக்கு ஒரு முடிவே இல்லை. எங்க ஊர் பக்கத்தில் கூட இந்த சம்பவம் நடந்து இருந்தது. எந்த ஆட்சி மாறினாலுமே இந்த மாதிரி வன்முறைகள் மட்டும் மாறவே இல்லை. அதற்கு தான் ஒரு மாற்றம் வரணும் என்று விரும்புகிறேன். அந்த மாற்றமாக விஜய் இருப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் கஷ்டத்தில் இருந்த போது எங்களுக்காக விஜய் நின்றார். அந்த அன்புக்காக தான் விஜய் கட்சியில் சேர்ந்து அவருக்காக உழைக்கணும்னு முடிவு பண்ணி கட்சியில் சேர்ந்து விட்டேன். விஜய் தம்பியை நேரில் பார்க்க முடிந்தால் ஸ்டெர்லைட்டில் இறந்த போராளிக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட கோரிக்கை வைக்கணும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full