25வது திருமண நாள் : குடும்பத்துடன் சென்று முருகனுக்கு மொட்டையடித்த சுந்தர்.சி - குவியும் வாழ்த்துக்கள்
தங்களின் 25வது திருமண நாளை சுந்தர் சி.- குஷ்பூ கொண்டாடி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. கடந்த 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார்.
மேலும், தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சுந்தர்.சி அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இவர் ‘தலைநகரம், வீராப்பு, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு போன்ற பல படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரே இயக்கி நடித்த ‘நகரம் மறுபக்கம், கலகலப்பு 1&2, அரண்மனை 1 & 2, 3’ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
சுந்தர் சி திரைப்பயணம்:
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி இருந்தது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், விடிவி கணேஷ், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இதுவரை வந்த மூன்று பாகங்களை விட இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
சுந்தர்.சி படங்கள்:
இதை அடுத்து சுந்தர்.சி அவர்கள் மீண்டும் வடிவேலுவை வைத்து கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். 15 ஆண்டுகளாக இந்தக் கூட்டணி இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். தற்போது இந்த கூட்டணியில் படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்குகிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி இருந்தது.
சுந்தர்.சி - குஷ்பூ திருமணம்:
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ரெஜினா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜையை பிரமாண்டமாக நடத்தி இருந்தார்கள். இதற்கிடையில் இயக்குனர் சுந்தர்.சி அவர்கள் நடிகை குஷ்பூவை 5 வருடமாக உருகி உருகி காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
சுந்தர்.சி-குஷ்பூ லேட்டஸ்ட்:
தற்போது இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னரும் குஷ்பூ சினிமா, அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் குஷ்பூ- சுந்தர்.சி இருவரும் தங்களுடைய 25 வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள். இன்றுடன் இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. திருமண நாளை முன்னிட்டு இருவரும் பழனிக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு, சுந்தர்.சி மொட்டை அடித்திருக்கிறார். பின் அங்குள்ள பக்தர்களுடன் சேர்ந்து சுந்தர்.சி- குஷ்பு இருவரும் போட்டோ எடுத்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சுந்தர்.சி-குஷ்பூவுக்கு திருமணநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.