கட்சிக் கொடி ஏற்ற அனுமதி மறுப்பு, ஏ.ஆர்.ரகுமானால் வந்த சிக்கல்- விஜய் எடுத்த அதிரடி முடிவு

By subhashini · 20/8/2024

தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றும் விழாவிற்கு காவல் துறை அனுமதி தர மறுத்து இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனால் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கூறியிருந்தார். இதற்காக புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

விஜய் அரசியல்:

மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை வரும் 22-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.

விஜய் கட்சி கொடி:

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியினை அறிமுகம் செய்தவுடன் அனைத்து பகுதிகளிலுமே கொடியேற்றும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து விஜய் தலைமையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, இன்று பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டிருக்கிறார். அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் காட்சியளிக்கிறது. இது ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது .

அனுமதி மறுத்த போலீஸ்:

தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயின் கட்சிக் கொடி குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயின் கட்சி கொடி ஏற்றும் விழாவிற்கு அனுமதி மறுத்திருக்கும் தகவல்தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, நாளை மறுநாள் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி ஏற்றும் விழாவிற்கு அனுமதி கேட்டு போலீசாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5000 பேர்களை வைத்து கட்சி கொடியை ஏற்றி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விஜய் எடுத்த முடிவு:

ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த போது கடும் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகி இருந்தார்கள். இந்த காரணத்தினால் காவல்துறை சார்பாக விஜயின் கட்சி கொடி ஏற்றும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு உங்கள் கட்சி அலுவலகத்திலேயே கொடியேற்றும் விழாவை வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் விஜய், தன் கட்சி அலுவலகத்தில் 250- 300 பேரை மட்டும் வைத்து காலை 8:30 மணியில் இருந்து 10.30 மணிக்குள்ளாக கட்சி கொடியை ஏற்ற இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full