டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலித்தால் வழக்கு! ஆன்லைன் முறைக்கு காரணம் என்ன?
கூடுதல் பண வசூலைத் தடுக்கவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் மதுபானங்களைத் தேர்வு செய்யவும் புதிய ஆன்லைன் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய ஆன்லைன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபானங்களின் விலை, கூடுதல் பண வசூல், பிராண்ட் தேர்வு, ஆன்லைன் ஆர்டர் மற்றும் QR குறியீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
கூடுதல் பணம் வசூலித்தால் காவல்துறை நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து முழுமையாகப் பார்த்த பிறகு பதில் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
விரும்பும் மதுபானத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு
டாஸ்மாக் கடைகளில் சில குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டுமே விற்பனை செய்ய முயற்சிப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாக அமைச்சர் கூறினார். “சில கடைகளில் சில பிராண்ட் சரக்குகளை மட்டுமே விற்கின்றனர். சில சரக்குகளை மட்டும் விற்க முயற்சிக்கின்றனர். அந்தப் புகார்களின் அடிப்படையில்தான் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கினார்.வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மதுபான பிராண்டு எந்தக் கடையில் உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பட்வைசர், பாஸ்டர்ஸ் குறித்து அமைச்சர்
வெளிநாட்டு மதுபானங்கள் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இந்தத் துறையில் எந்த நிறுவனமும் ஏகபோக நிலையைப் பெறக்கூடாது என்றார். வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதற்கேற்ப மதுபானங்களை வழங்குவது கடையின் கடமை என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே பட்வைசர் பீர் குறித்து கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பாஸ்டர்ஸ் உள்ளிட்ட மதுபானங்களுக்கான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
இன்று முதல் ஆன்லைன் நடைமுறை
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து வாங்கும் நடைமுறை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த புதிய நடைமுறையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மதுபானத்தை ஆன்லைனில் தேடி, எந்தக் கடையில் அந்த மதுபானம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன்பிறகு ஆர்டர் செய்து, கடையில் QR குறியீட்டை காண்பித்து மதுபானத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே 700-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து மதுபானங்களை வாங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
GPay இருந்தும் ஏன் புதிய ஆன்லைன் முறை?
டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல், GPay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இருந்தாலும், வாடிக்கையாளர்களிடம் ரூ.10, ரூ.20 போன்ற கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் இருந்ததாக அமைச்சர் கூறினார். அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில்தான் புதிய ஆன்லைன் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
மேலும், ஆன்லைன் ஆர்டர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்கும் வாய்ப்பும் கிடைக்கும். QR குறியீட்டை காண்பித்த பிறகே அவர்கள் ஆர்டர் செய்த மதுபானங்கள் என்ன என்பது கடை ஊழியர்களுக்கு தெரியும் என்பதால், விற்பனையில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்றும் அரசு தரப்பு எதிர்பார்க்கிறது.
“வசதி ஏற்படுத்துவது குடிப்பதை ஊக்குவிப்பது அல்ல”
ஆன்லைன் மதுபான விற்பனை நடைமுறையை அறிமுகப்படுத்துவது குடிப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கை அல்ல என்றும் அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தினார். “இது குடிப்பவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது கிடையாது. GPay செய்வதற்கு ஆகும் நேரத்தை குறைப்பதற்காகவும், பில் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், எந்தக் கடையில் என்னென்ன மதுபானங்கள் கிடைக்கின்றன என்பதை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிவதால், குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டும் விற்பனை செய்யும் நடைமுறையையும் கட்டுப்படுத்த முடியும் என அரசு கருதுகிறது.
“கடந்த காலங்களில் சரிப்படுத்த முயற்சி இல்லை”
டாஸ்மாக் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவற்றை முழுமையாக சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற கருத்தையும் அமைச்சர் முன்வைத்தார்.தற்போது அரசு அந்தப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆன்லைன் நடைமுறை தற்போது தொடக்க நிலையில் இருப்பதால், அதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் புகார்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதனால், புதிய ஆன்லைன் முறை டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையா அல்லது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்து கூடுதல் பண வசூல், பிராண்ட் கட்டுப்பாடு உள்ளிட்ட புகார்களை குறைப்பதற்கான நிர்வாக சீர்திருத்தமா என்பது வரும் நாட்களில் இந்த நடைமுறையின் செயல்பாட்டைப் பொறுத்தே தெரியவரும்.