விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'தலைவன் தலைவி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 25/7/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, மைனா நந்தினி, தீபா வெங்கட், காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், சரவணன், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையேயான உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் விஜய் சேதுபதி குடும்பத்துடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வருகிறார். பின் வீட்டில் விஜய் சேதுபதிக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் விஜய் சேதுபதிக்கு நித்யா மேனனை நிச்சயம் செய்கிறார்கள். அதற்குப்பின் இருவருமே பேசி பழகி காதலிக்கிறார்கள். விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, தந்தை எல்லோருமே ரவுடிகள் என்று நித்யா மேனன் குடும்பத்துக்கு தெரிய வருகிறது. இதனால் திருமணத்தையே நிறுத்தி விட நித்யா மேனன் வீட்டில் முடிவு செய்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி மீது இருந்த காதலால் தன்னுடைய வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார் நித்யா மேனன்.

திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நித்யா மேனன் வாழ்க்கை நன்றாக தான் செல்கிறது. விஜய் சேதுபதியின் தந்தை சரவணன், தன்னுடைய மருமகள் நித்யா மேனனை கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து கணக்கை எல்லாம் பார்த்துக்கொள்ள சொல்கிறார். இதற்கு முன்பு இந்த வேலையை விஜய் சேதுபதி அம்மா தான் பார்த்திருந்தார். மருமகள் வந்தவுடன் தன்னுடைய இடம் பறிபோகிவிட்டதே என்று விஜய் சேதுபதி அம்மாவுக்கு ஈகோ ஏற்படுகிறது. அதற்குப்பின் திருமணத்திற்கு முன்பு வரை தன்னுடைய தங்கையின் பெயரில்தான் விஜய் சேதுபதி ஹோட்டல் நடத்தி வந்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நித்யா மேனனின் பெயரில் ஓட்டலை மாற்றியதால் அவருடைய தங்கைக்கு கோபம் வருகிறது. இதனால் அம்மா- மகளும் சேர்ந்து நித்யா மேனனை ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆள் மாதிரி நடத்துகிறார்கள். இதையெல்லாம் நித்யா மேனனின் அம்மா பார்த்துவிட்டு சண்டை போடுகிறார். பின் விஜய் சேதுபதி- நித்யா மேனன் இருவருக்கும் இடையே கலவரம் தொடங்குகிறது. ஒரு நாள், இரண்டு நாள் என்று இவர்களுடைய சண்டையும் நீடித்துக் கொண்டே போகிறது. இதற்கிடையில் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.

சண்டை போடுவது, பிரிவது, சேர்வது என்று இவர்கள் இருக்கிறார்கள். இதனால் விஜய் சேதுபதிக்கு வேறொரு திருமணத்தை செய்வது வைப்பதற்காக விஜய் சேதுபதி வீட்டில் முடிவெடுக்கிறார்கள். இந்த தகவலை அறிந்த நித்யா மேனன் சண்டை போட்டு விஜய் சேதுபதியை விட்டு பிரிந்து விடுகிறார். இருந்தாலும் உள்ளுக்குள் இரண்டு பேருமே சேர்ந்து வாழ வேண்டும் என்று தவிக்கிறார்கள். அப்போது குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்வு கோயில் நடக்கிறது. தந்தையிடம் கூட சொல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் விஜய் சேதுபதி கோபத்தில் கோயிலுக்கு செல்கிறார்.

அதற்கு பின் என்ன நடந்தது? இருவரும் சேர்ந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருமே தங்களுடைய நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். உண்மையாகவே இருவரும் கணவன், மனைவியாகவே நடித்து இருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் எப்படி இருப்பார்களோ அதே மாதிரி தான் படத்தில் இருவரும் இருக்கிறார்கள். மொத்த படத்தையுமே இருவரும் தோளில் சுமந்து சென்றிருக்கிறார்கள்.

சண்டை, காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, டான்ஸ் என அனைத்திலுமே இந்த ஜோடி பட்டையை கிளப்பி இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் தீபா, ரோஷினி ஹரிப்பிரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், அருள்தாஸ், ஜானகி, சென்ராயன் என பலருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்களை அடுத்து படத்தில் யோகி பாபு நகைச்சுவையில் தூள் கிளம்பி இருக்கிறார்.
இயக்குனர் எடுத்துக்கொண்ட திரை கதையை சிறப்பாகவும் அருமையாகவும் கொடுத்திருக்கிறார்.
ஆனால், சில இடங்களில் தான் சலிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் நகைச்சுவையின் மூலம் போர் அடிக்காமல் இயக்குனர் கொண்டு சென்று இருப்பது பாராட்டுக்கூடிய விஷயம்.

https://youtu.be/2W8GxfDRhp4

சில காட்சிகள் பழசாக இருந்தாலும் அதை அருமையாக காண்பித்து இருக்கிறார். பின்னணி இசை ஓகே. பொட்டல முட்டாய் பாடலைத் தவிர வேறு எந்த பாடலுமே பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இயக்குனர் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், அதை கொண்டு சென்ற விதம் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே நடக்கும் சண்டை, அவர்களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, பின் குழந்தைகள் எதிர்காலம், பிரச்சனைக்கு முடிவு விவாகரத்து இல்லை என பல விஷயங்களை கூறியிருக்கிறார். குறிப்பாக, கணவன்- மனைவி சண்டைக்குள் யாரும் வரக்கூடாது என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார். எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக தலைவன் தலைவி இருக்கிறது.

நிறை:

நித்யா மேனன்- விஜய் சேதுபதி நடிப்பு சூப்பர்

மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்.

கதைக்களம் அருமை.

கதைக்களத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதம் அருமை

ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது

கணவன் மனைவி உறவை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்

குறை:

சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் தலைவன் தலைவி - சிறப்பான ஆட்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full