அது மட்டும் நடக்காம இருந்திருந்தா, சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருப்பார் - கோதண்டம் குறித்து தளபதி தினேஷ்

By krithika · 19/12/2024

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் சண்டை கலைஞரான கோதண்டராமன் மறைவு குறித்து ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் கூறியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வந்தவர் கோதண்டராமன். பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து பின் நகைச்சுவை நடிகராகவும் அடையாளம் கண்டார். சுந்தர்.சி இயக்கிய 'கலகலப்பு' படம் அவருக்கு ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக அடையாளம் கொடுத்தது. இப்படத்தில் பேய் என்கின்ற அவரது கதாபாத்திரம் தனித்துவமாக கவனம் பெற்றது.

மேலும், ஸ்டண்ட் யூனியன் உறுப்பினராக இருந்தஇவரை திரையுலகில் 'பேய் கிருஷ்ணன்' என்று அழைப்பார்கள் ‌. இவர் பகவதி, திருப்பதி, கிரீடம், கலகலப்பு, அந்நியன் உன்கிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் தனது உறவினர்கள் எல்லாம் தன்னை விட்டு சென்று விட்டதாகவும் தற்போது தனியாக நிற்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் தன்னுடன் ஸ்டண்ட் யூனியனில் இருக்கும் நண்பர்கள், மக்கள்தான் தனக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

கோதண்டராமன் மரணம்:

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கோதண்டராமன் இன்று பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 65 ஆகும். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடப்பதாக கூறப்படுகிறது. அவரது மறைவு குறித்து ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான 'தளபதி தினேஷ்' சில விஷயங்களை தற்போது பகிர்ந்து இருக்கிறார். இவர் ரஜினியின் 'பாட்ஷா' , சுந்தர். சி யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்திருக்கிறார்.

நண்பன் குறித்து உருக்கம்:

அதில், நான் ஃபைட்டராக இருந்தபோது 'தளபதி' படத்தின் முதல் சண்டைக் காட்சியில் நான் நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியில் ரஜினி சார் என்னை 'தளபதி' என்று அழைப்பார். அதற்குப் பிறகுதான் தினேஷாக இருந்த என்னை அனைவரும் 'தளபதி தினேஷ்' என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் ஃபைட்டராக இருந்த கிருஷ்ணன், ஒரு படத்தில் பேயாக நடித்திருப்பார். அதன் பிறகு அவரை அனைவரும் 'பேய் கிருஷ்ணன்' இன்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். அவர் மிகவும் நல்ல மனிதர்.

ரொம்ப திறமையானவர்:

மேலும், அவர் பார்க்க தான் முரட்டு ஆளாக தெரிவாரேத் தவிர ரொம்ப மென்மையானவர். அவர் மிகவும் திறமையான நடிகர். ஒருமுறை சொன்னாலே போதும், அப்படியே பிடித்துக் கொள்வார். பயங்கர ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் கூட ரொம்ப ஈசியாக நடித்து அசத்தி விடுவார். அவர் 'கலகலப்பு' க்கு முன்பு நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைத்தது அந்த படத்தில் தான். ஆனால், கலகலப்பு படத்திற்கு பிறகு அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.

கோதண்டராமனுக்கு நடந்த விபத்து:

அதாவது ஒரு விபத்தில் அவரது காலில் அடிபட்டுவிட்டது. மினி லாரி ஒன்று அவரது காலில் ஏறியதில் நடக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார். அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், அவரால் நடிக்க முடியவில்லை. இல்லையென்றால் அவர் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து இருப்பார். நேரம் கிடைக்கும் போது அவரிடம் ஸ்டண்ட் யூனியனில் பேசி இருக்கிறேன். மற்றபடி பெரிதாக அவருடன் தொடர்பில் இல்லை. தற்போது அவரது மகனும் ஃபைட்டராக களம் இறங்கி இருக்கிறார். தற்போது பேய் கிருஷ்ணனின் இழப்பு வேதனை அளிக்கிறது என்று உருக்கமாக கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full