ராஜசேகரனின் மனைவி நான் தான், ஆனா சான்றிதழ் கொடுக்க மறுக்கிறாங்க - வேதனையில் தாரா
தென்னிந்திய சினிமா உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர் 2019ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இறப்பதற்குள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் இவரின் கடைசி ஆசையாம். இதனால் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கி இருந்தார். ஆனால், அந்த வீட்டில் குடியேறுவதற்குள் ராஜசேகர் இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மட்டுமே சில மணி நேரம் அந்த வீட்டில் வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. தற்போது உறவுகளின் ஆதரவு இல்லாத நிலையில் தனி மனுஷியாக வேதனையில் இருக்கிறார் அவர் மனைவி தாரா.
ராஜசேகர் இறந்த பின் பேங்கில் மீதி பணம் கட்ட சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள் என்று கடந்த சில ஆண்டுகளாக பேட்டியில் கூறி இருந்தார். மேலும், கடன் கொடுத்த வங்கி ராஜசேகரன் வீட்டை ஏலத்தில் விட முயற்சித்து வருகிறது. பின் பேங்க், தாரா வீட்டை ஜப்தி செய்து விட்டார்கள். நாட்கள் தான் ஆனதே தவிர என் வீட்டு விஷயத்தில் ஒரு நல்லதும் நடக்கவில்லை. இதை அடுத்து தாரா பேட்டிகள், பிரபலங்கள் என பலரிடமே உதவி கேட்டிருந்தார். ஆனால் யாருமே தாராவின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. இதை அடுத்து தனக்கு குடியிருக்க வீடு வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தார். முதல்வர் அலுவலகத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால், எந்த ஒரு உதவியும் தாராவுக்கு கிடைக்கவில்லை.
ராஜசேகர் மனைவி தாரா:
இதையடுத்து கடந்த மாதம் தமிழக அரசின் திரை கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ராஜசேகரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதை வாங்க சென்ற தாரா, துணை முதல்வரிடம் தன் நிலைமையை எடுத்து சொல்லி உதவி கேட்டார். அவருமே நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். அதற்கு பிறகு எதுவும் நடக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தாரா- ராஜசேகரன் திருமணம் தாமதமாக நடந்ததாலும் தாராவை அவர் திருமணம் செய்து கொண்டது திரை உலகில் பலருக்குமே தெரியாது.
தாரா கோரிக்கை:
முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவர் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது நிஜம். ஆனால் தாரா, ராஜசேகரின் சட்டபூர்வ மனைவி தானா? என்ற தெளிவான பதில் கிடைக்காததால் அந்த கோரிக்கை மனு அப்படியே நிலுவையில் இருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தாரா, எங்களுக்கு திருமணம் ஆன உடனே நாங்கள் பதிவு செய்துவிட்டோம். அவருடைய குடும்பத்திரனால் ஏதாவது பிரச்சனை வரும் என்றுதான் நாங்கள் பதிவு செய்தோம். அதனால் பதிவு செர்டிகட்டுமே வாங்கி வைத்திருந்தேன். வங்கி என்னுடைய வீட்டை ஜப்தி பண்ணும் போது என்னுடைய பொருட்களை எடுத்து சென்று விட்டார்கள். நான் கேட்டதற்கு கொடுக்கவில்லை.
தாரா பேட்டி:
இந்த சூழலில் தான் முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். நான் ஊரெல்லாம் போய் ராஜசேகர் பொண்டாட்டி நான் தான் என்று நோட்டீஸா ஓட்ட முடியும்? விசாரிக்க வந்தவங்க என்னையே கேட்டிருக்கலாம். நான் சர்டிபிகேட்டை காட்டி இருப்பேன். யாரிடம் கேட்டார்கள் தெரியவில்லை. நான் தான் அவருடைய அதிகாரப்பூர்வ மனைவி. அதிகாரிகளுக்கு புரிய வைப்பதற்குள் தேர்தல் வந்துவிட்டது. பின் சான்றிதழ் கையில் வைத்துக்கொள்ளலாம் என்று பதிவு செய்த அலுவலகத்தில் நகல் கேட்டேன். எடுத்து தருகிறோம் என்று பத்துநாள் செய்துவிட்டார்கள். பின் அவர்கள், நீங்கள் கேட்ட திருமண பதிவு சான்றிதழ் நகல் அடங்கிய கோப்புகள் மிக்ஸாம் புயல் காரணமாக சேதம் அடைந்திருப்பதால் சான்றிதழ் வழங்க முடியவில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டார்கள். இனி புதிய அரசாங்கம் வந்த பிறகு தான் என்னை கோரிக்கை நிறைவேறுமாறுன்னு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.