உங்களால் தான் தமிழ் சினிமா அழிய போகுது - மாதவனை விமர்சித்த திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம்

By subhashini · 6/4/2025

மாதவன்-சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டெஸ்ட். YNOT ஸ்டுடியோ தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இந்த நிறுவனம் தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறது. இந்த படங்களை எல்லாம் தயாரித்த சசிகாந்த் தான் டெஸ்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், பொதுவாகவே பெரிய நடிகர்கள் எல்லோருமே ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தில் தான் நடிக்கிறார்கள்.

திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி:

அது அவர்களுடைய உரிமை. அதை நாம் எதையும் குறை சொல்ல முடியாது. டெக்னாலஜி டெவெலப்பே இல்லாத காலத்தில் கூட அதாவது எம்ஜிஆர், சிவாஜி காலத்திலும் சரி ரஜினி, கமல் காலத்திலும் சரி இன்னும் சொல்லப்போனால் இப்ப இருக்குற விஜய், அஜித் காலத்திலும் சரி ஒரு வருடத்திற்கு மூன்று, நான்கு படங்கள் கொடுத்து விடுகிறார்கள். ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் எல்லாம் ஒரு வருஷத்துக்கே 10 படம் எல்லாம் வந்திருக்கிறது.

சினிமா நிலை:

அப்போ எல்லாம் இன்டஸ்ட்ரி ரொம்ப ஆரோக்கியமாக இருந்தது. பெரிய நடிகர்கள் படம் வந்துட்டே இருந்ததால் மக்கள் தியேட்டருக்கு வந்து கொண்டே இருப்பார்கள். இப்போ டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருப்பதால் இந்த காலத்தில் நடிகர்கள் எல்லாம் வருஷத்திற்கு ஒரு படம் நடிப்பதை அபூர்வமாக இருக்கிறது. அந்த காலத்தில் எல்லாம் ஒரு படத்துக்கு செட்டு போட ஆயிரம் பேராவது வேலை செய்ய வேண்டும்.

நடிகர்கள் பற்றி சொன்னது:

இப்போது எத்தனைையோ வசதி வந்து இருக்கிறது. ஒரு வருஷத்துக்கு 20 படம் பண்ண முடியும். ஆனால், இன்றைக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் இவங்க ஜாலியாக நடிக்கிறார்கள். சம்பளம் தான் வந்துவிட்டது என்று வேலை நாட்கள் எல்லாமே குறைக்கிறார்கள். ஒரு படத்துல ஹீரோக்கு 50ல் இருந்து 55 நாட்கள் தான் வேலையே. ஒரு ராமாயணம், மகாபாரதம் மாதிரி படம் எடுத்தால் தான் அதிக நாட்கள் தேவைப்படும். இப்போது இருக்கும் நடிகர்கள் தாராளமாக வருஷத்திற்கு இரண்டு படங்கள் நடிக்கலாம்.

நடிகர்களுக்கு வைத்த கோரிக்கை:

அப்போதான் தியேட்டர் உயிர் வாழ முடியும். ஓடிடி எல்லாம் வந்ததால் இப்போது சேட்டிலைட் எல்லாம் காணாமல் போய்விட்டது. தியேட்டர் மட்டும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. ஒரு பத்து பெரிய நடிகர்கள் வருஷத்துக்கு இரண்டு படம் பண்ணால் தியேட்டரில் வருஷத்துக்கு 25 படம் வரும். மக்களும் தியேட்டரை நோக்கி வருவார்கள். இதெல்லாம் விட்டுவிட்டு நடிகர் மாதவன் நெட்ப்ளிக்ஸில் நடிக்கப் போய்விட்டார். அங்கே போய் நடிங்க. அது உங்க சுதந்திரம். எங்களால் ஒன்னும் பண்ண முடியாது. ஆனால், நீங்கள் எல்லாம் இப்படி போக போக தமிழ் சினிமா துறை அழிய தான் போகிறது. அந்த அழிவிற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்காதீர்கள். உங்களை ஏத்திவிட்ட சினிமாவை வாழ வையுங்கள். இதுதான் நடிகர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full