‘இட்லி கடை’ படத்தை மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், பார்த்திபன், சமுத்திரகனி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு பண்பாடு, கலாச்சாரம், அகிம்சை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த படத்தை கொண்டு சென்றிருப்பதால் பலரும் பாராட்டினார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை மாணவர்களுக்கும் இலவசமாக திரையிட வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.
இட்லி கடை:
அதில், தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்த இட்லி கடை தமிழ் திரைப்படம் நம்முடைய சமூக பண்பாடு கலாச்சாரத்தின் ஆணிவேராக, நேர்மறை எண்ணங்களை விதைத்து, கலைத்திறன் மிக்க படைப்பாக குழந்தைகள், மாணவர்கள் இளைஞர்களின் என அகிம்சை போதிக்கும் அற்புத படைப்பாக இருக்கிறது. வளர்ந்து வரும் தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகளும், போதை கலாச்சாரமும், பாலியல் சீண்டல்களும், ரத்தமும், துப்பாக்கி சத்தமும் அதிகமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள், சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலையில் இட்லி கடை படம் மனிதநேயத்தை சொல்லித் தரும் வாழ்வியல் பாடமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக பாஜக அறிக்கை:
இதனால் இந்த படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். நவீன காலத்தை கருத்தில் கொள்ளாமல், பழமை வாதத்தை புகழ்ந்து இந்த படம் பேசுகிறது. இந்த படம் பார்க்கும் ஒவ்வொரு மாணவனின் இளைஞனின் ரசிகனின் மனதில் உள்ள தீய எதிர்மறை எண்ணம் கொண்ட அழுக்குகளை நீக்கி, தாய் தந்தை உறவின் புனிதத்தையும் ஆன்மீக, இறை சிந்தனையின் வலிமை குறித்தும் அழுத்தமாக நம்மிடம் பதியவைப்பதை மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது.
பாஜக வைத்த கோரிக்கை:
எனவே தமிழக அரசு நல்ல திரைப்படங்கள் எடுக்கும் போது வரிவிலக்கு அளிப்பதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது. நல்ல தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளித்து மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். யார் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள் என்பதைவிட நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டால் அந்த திரைப்படத்தை ஆதரிப்பது தமிழக அரசின் கடமை. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இட்லிகடை படத்தை இலவசமாக பார்க்க தமிழக அரசு உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.