மாநாட்டிற்கு ஓடி ஓடி உழைத்த நிர்வாகியின் திடீர் இழப்பு - போன் செய்து விஜய் கூறிய ஆறுதல்.

By subhashini · 22/10/2024

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி மாரடைப்பால் உயிர் இழந்து இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார். விஜய் தன்னுடைய கட்சி அறிமுகம் ஏற்றுவதற்கு முன் உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார்.

அந்தக் கொடியில் வாகை மலரும், இரு பக்கம் யானை படமும் இடம்பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். முறையான அனுமதி பெற்று மாநாடு நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். விஜய் அக்கட்சியின் முதல் மாநாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை அறிவித்திருந்தார். அதில், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறும் என்பதை அறிவித்திருந்தார்.

தவெக முதல் மாநாடு:

தற்போது மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் த.வெ.க. மாநாட்டின் பந்தக்கால் நடும் விழா நடைபெற்று இருந்தது. சுமார் 50,000 பேர் உட்காரும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேடை முழுவதையும் தலைவர் விஜய் சுற்றி பார்க்கும் வகையில் பாதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பார்க்கிங், மருத்துவ வசதி, சிசிடிவி கண்காணிப்பு என மாநாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் மாநாட்டுக்கான பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி செயலாளர் சரவணன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சரவணன் குறித்த தகவல்:

புதுச்சேரி சித்தன் குடிப்பகுதியை சேர்ந்தவர். இவருடைய மனைவி தேவி, இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே நடிகர் விஜயினுடைய தீவிர ரசிகர். பின் இவர் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்தார். அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சியை தொடங்கியவுடன் புதுச்சேரி மாநில செயலாளராகவும், கட்சி பொதுச் செயலாளருக்கு நெருக்கமானவராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மாநாடு வேலையை முடித்துவிட்டு புதுச்சேரியில் தன்னுடைய வீட்டிற்கு சரவணன் சென்றிருந்தார்.

சரவணன் இறப்பு:

அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், சரவணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள். இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் கட்சித் தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சரவணன் அவருடைய மறைவிற்கு தலைவரும் நடிகருமான விஜய் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர்.

விஜய் இரங்கல்:

கழகத்துக்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது சரவணன் உடைய உடல் புதுச்சேரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. சரவணன் உடலை பார்த்து புஸ்ஸி ஆனந்த் கதறி அழுது அஞ்சலி செலுத்துகிறார். அதோடு முதல் மாநாடு நடப்பதற்கு முன்பே கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த சரவணன் இறப்பு அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full