விடுதலைக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் - தொண்டர்கள் முன் விஜய் எடுத்துக்கொண்ட உறுதி மொழி

By Rajkumar · 22/8/2024

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றும் விழாவில், விஜய் எடுத்துக் கொண்ட உறுதி மொழிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

விஜய் அரசியல்:

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக கூறி இருந்தார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுமே கொடி ஏற்றும் விழா நடைபெறும் என்று கூறப்பட்டது. அதோடு சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்டு ஒத்திகை பார்த்திருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் விஜயின் கட்சி கொடி குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது.

தவெக கொடியேற்றும் விழா:

இந்நிலையில், பிரம்மாண்டமாக கொடி ஏற்றும் விழாவை நடத்த போலீசார் அனுமதி கொடுக்க மறுத்ததால், விஜய் தன் கட்சி அலுவலகத்தில் 250-300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற முடிவு செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சமீபத்தில் கொடி ஏற்றும் விழா குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பிட்டது போல், இன்று ஆகஸ்ட் 22, 2024 கொடியேற்றும் விழா சிறப்பாக நடந்தது. கொடி ஏற்றுவதற்கு முன்பு விஜய், தவெக தொண்டர்களுடன் சேர்ந்து கட்சிக்காக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

விஜய் உறுதிமொழி:

உறுதி மொழியில் அவர், 'நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவரிடமும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணி காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.

https://www.youtube.com/watch?v=VYIZ3V2rrHk

சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்:

மக்களாட்சி, மதசார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமையை கலைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடித்து என்று உளமாற உறுதி கூறுகின்றேன். தற்போது தவெக தலைவர் விஜய், தொண்டர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட இந்த உறுதிமொழி தான் சோசியல் மீடியா முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full