கமல் படத்தில் நடித்ததற்காக வீட்டில் அடி வாங்கிய வடிவுக்கரசி - காரணம் இதுதானாம்
தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை 'வடிவுக்கரசி'. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது வடிவுக்கரசி தொலைக்காட்சி சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாகவும் பின்னர் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
இன்று நடிகை வடிவுக்கரசியின் பிறந்தநாள். தற்போது நடிகை வடிவுக்கரசி அவர்கள் தன்னுடைய அனுபவங்களை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல்கள் தான் மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர், ' எங்களுடைய சொந்த ஊர் வேலூர் பக்கம் உள்ள ராணிப்பேட்டை தான். என்னுடைய அப்பா சண்முகம். சினிமா மீது அதிக ஆர்வம் உடையவர். அதனால்தான் சினிமாவிற்கு பைனான்ஸ் செய்து கொண்டிருந்தார். பின்னர் அதே படங்களிலும் சிறிய சிறிய வேடங்களில் நடித்தார்.
வடிவுக்கரசி குறித்து:
ஆனால், ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு பைனான்ஸ் தொழில் திவால் ஆகியது. இதனால் நாங்கள் எங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தோம். அதோடு சினிமாவில் பிரபல இயக்குனர் ஏ.பி நாகராஜன் என்னுடைய பெரியப்பா. ஆனாலும் நாங்கள் சினிமா பார்க்க தியேட்டருக்கு போக கூட கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சென்னைக்கு வந்து தான் என்னுடைய படிப்பை தொடங்கினேன். குடும்ப சூழ்நிலை காரணமாக பியுசி வரை மட்டும்தான் படித்தேன்.
குடும்ப கஷ்டம்:
அதற்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டு வேலையில் சேர்ந்தேன். முதலில் தூர்தர்ஷனில், 'கண்மணி பூங்கா' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் பள்ளி ஒன்றில் டீச்சராக 75 ரூபாய்க்கு சம்பளத்திற்கு சேர்ந்தேன். அதற்குப் பிறகு கன்னிமரா ஹோட்டலில் வேலை செய்யும் போது தான் பாரதிராஜா இயக்கு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் நான் யோசிக்காமல் என் வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
முதல் வாய்ப்பு:
பின்பு ஒரு நாள் நான் வேலை பார்க்கும் இடத்திற்கே தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி சாரும் அவருடைய மேனேஜரும் என்னை பார்க்க வந்தார்கள். பாரதிராஜா இயக்கம் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுவும் கமல் சார் உடன் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதலில் முடியாது என்று தான் சொன்னேன். ஆனால், என்னோடு வேலை செய்றவங்க இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதே என்று அறிவுரை கூறினார்கள். பிறகு, நான் வீட்டிற்கு தெரியாமல் அப்போ அந்த படத்தில் நடித்து வந்தேன். எனக்கு வசனங்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது பாக்யராஜ் சார் தான். அந்தப் படம் தான் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'சிகப்பு ரோஜாக்கள்'.
அப்பாவின் கோபம்:
அந்த சமயத்தில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் படத்தில் ஒரு சீன் எடுக்க வேண்டும் என்று என்னை அழைத்து வர சொல்லி ஆட்கள் அனுப்பி வைத்திருந்தார். அப்போதுதான் என் போட்டோவை எடுத்து என் அப்பாவிடம் காண்பித்தார்கள். அதைப் பார்த்த என் அப்பா பயங்கர கடுப்பாகி கோபத்தில் இருந்தார். என் வேலையை முடித்துவிட்டு நான் வீட்டுக்கு வந்த உடனே இதைப்பற்றி என்னிடம் கேட்டார். அப்போதுதான் நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று ஒத்துக் கொண்டேன். அப்போ அப்பாகிட்ட எனக்கு செம அடி கிடைச்சுது. எங்க வீடு கலவரம் பூமியாக இருந்தது என நடிகை வடிவுக்கரசி தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்திருந்தார். தற்போது, வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் மிகவும் பிசியான ஒரு நடிகையாக வலம் வருகிறார் வடிவுக்கரசி.