மாரி செல்வராஜ் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை சொல்லும் 'வாழை' படம் எப்படி இருக்கு? - முழு விமர்சனம் இதோ

By Rajkumar · 23/8/2024

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் 'வாழை'. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தனது வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவத்துடன் சேர்த்து மிகப் பெரிய அரசியலையும் பேசியிருக்கும் மாரி செல்வராஜின் 'வாழை' மக்கள் மனதில் இடம்பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்:

கதையில், தூத்துக்குடியைச் சேர்ந்த புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வரும் சிறுவன் சிவணைந்தன். என்ன சேட்டைகள் செய்தாலும், ஊரெல்லாம் திரிந்தாலும் வகுப்பில் முதல் மாணவன் அவன் தான். ஆனால் வறுமையின் காரணமாக, தனது அம்மாவின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்க அழைத்துச் செல்லப்படுகிறான். சுமார் 20 கிலோ எடையுள்ள வாழைத்தார்களை சிறுவன் சுமப்பதும், அதனால் அவனுக்கு ஏற்படும் உடல் வலியால் அவன் அழுவதும் அந்த வாழ்க்கையை வாழ்பவர்களின் பாரத்தை சொல்கிறது.

சிவணைந்தனின் ஏழ்மையும், வேறு வழி இல்லாமல் அவன் செய்யும் வாழைத்தார் பணியும் ஒரு பக்கம் இருக்க. மறுபக்கம் அவன் விரும்பும் பள்ளிக்கூடமும் அங்கு அவனைக் கவர்ந்த பூங்கொடி (நிகிலா விமல்) ஆசிரியரும் இருக்கிறார்கள். அந்த ஆசிரியையின் பெயரை தனது நோட்டில் எழுதி வைப்பதும், அவர் வகுப்பை கடந்து செல்லும் போதெல்லாம் ஒரு கதாநாயகியை பார்ப்பது போல் பார்ப்பதும் என்று அவனது நாட்கள் செல்கிறது. பின் தனது நெருங்கிய நண்பன் சேகர் உடன் சேர்ந்து பூங்கொடி ஆசிரியையை பார்த்து ரசிப்பது, பாடல் பாடுவது என நமது பள்ளி பருவத்தை இப்படம் நினைவுக்கு கொண்டு வருகிறது.

அதற்குப் பிறகு, அதே ஊரில் வாழைத்தார் சுமக்க செல்லும் கனி (கலையரசன்) சம்பள உயர்வு கேட்டு தன் ஆட்களை திரட்டுகிறான். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் முதலாளியும் சம்பள உயர்வுக்கு ஒப்புக்கொள்கிறார். இந்த சம்பள உயர்வை காரணமாக காட்டி அந்த முதலாளி, அந்த மக்களை வேறு ஒரு ஆபத்தில் சிக்க வைக்கிறார். அந்த முதலாளி சிக்க வைக்கும் ஆபத்து என்ன? வாழைத்தார் சுமப்பதிலிருந்து சிவணைந்தன் தப்பினானா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கிராமத்தையும், அங்கு தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளையும் அப்படியே கண்முன் காட்டுவதில் மாரி செல்வராஜிற்கு நிகர் மாரி செல்வராஜ் என்றே சொல்லலாம். வாழைத் தோட்டங்களையும், மண் சாலைகளையும், கிராமத்தையும் அற்புதமாக தனது கேமராவில் படம் பிடித்து நம்மை 1998 காலத்திற்க்கே கொண்டு சேர்ந்ததற்கும் தேனி ஈஸ்வரை பாராட்ட வேண்டும். சந்தோஷ நாராயணன் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், படத்தில் ஆசிரியையாக வரும் நிகிலா விமல் அசத்தலாக நடித்துள்ளார். கனியாக வரும் கலையரசன் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இளைஞராக அசத்தலாக நடித்துள்ளார்.

சிறுவனின் அக்காவாக நடித்துள்ள திவ்யா துரைசாமி ஒரு பாசமான அக்காவாக அருமையாக நடத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியே படத்தின் பெரும் பலமாக அமைகிறது. குறிப்பாக இரண்டாம் பாகத்தில் சிவணைந்தன் எதிர்கொள்ளும் சிக்கலும், அதேசமயம் ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அளவுக்கு நிகழும் மற்றொரு சம்பவமும் மனதை ரணமாக்குகிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சி யாருமே எதிர்பாராதது. இந்தப் படத்திற்கு கிராமப்புறங்களில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நிறை:

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை

இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு

தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு அருமை.

நடிகர்களை தேர்ந்தெடுத்த விதம் சிறப்பு

https://youtu.be/OQGPJaowdoI?si=QW4SNW7jEJpgTqKq

குறை:

முதல் பாகம் மெதுவாக செல்கிறது.

கிளைமாக்ஸ் முன்கூட்டியே கணிப்பது போல் இருக்கிறது.

ஆங்காங்கே, சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் 'வாழை' - மாரி செல்வராஜின் வலி

Tamil Behind Talkies AMP · Quick view
View full