IND vs SL Final: 11 பந்தில் அரைசதம்! உலக சாதனை படைத்து இலங்கை அணியை துவம்சம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!
IND vs SL Final: 11 பந்தில் அரைசதம்! உலக சாதனை படைத்து இலங்கை அணியை துவம்சம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒருநாள் தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்தது. டாஸ் வென்ற இலங்கை 'ஏ' அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. முந்தைய போட்டிகளில் ஏற்பட்ட சறுக்கல்களுக்கு பதிலடி கொடுக்கக் காத்திருந்த இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன்கள், ஆரம்பத்திலிருந்தே இலங்கை பௌலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் ரேட்டை மிரட்டலாக உயர்த்தினர்.
வைபவ்வின் அதிரடி
இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து, உலகிலேயே 'மிக அதிவேகமாக அரைசதம் அடித்த லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வீரர்' என்ற வரலாற்று உலக சாதனையை சூர்யவன்ஷி படைத்தார். உலக சாதனை சதத்தை நெருங்கிய அவர், துரதிர்ஷ்டவசமாக 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி, வெறும் 6 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
சூர்யவன்ஷியின் இந்த அசாத்தியமான அதிரடி ஆட்டம் மற்றும் கேப்டன் திலக் வர்மாவின் சிறப்பான பார்ட்னர்ஷிப் பங்களிப்பு ஆகியவற்றால் இந்திய 'ஏ' அணி ரன் குவித்து இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய இலங்கை 'ஏ' அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதிவரை ஆதிக்கத்தை நிலைநிறுத்திய இந்தியா 'ஏ' அணி, இலங்கை அணியை வீழ்த்தி இந்த முக்கோணத் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
"பிரஷர் இல்லை, பிளான் தான் முக்கியம்!" - வைபவ் சூர்யவன்ஷி
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷி, தன் மீதான எதிர்பார்ப்புகள் குறித்து மனம் திறந்தார். "இறுதிப்போட்டி என்பதால் என் மீது ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்காக நான் எந்த பிரஷரையும் வளர்த்துக்கொள்ளவில்லை. கடந்த சில போட்டிகளில் நான் நினைத்த பிளான்கள் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை, அதை எப்படி சரி செய்வது என்பதில் மட்டும்தான் என் கவனம் இருந்தது," என்று கூறினார்.
மேலும் தனது கம்பேக் குறித்து பேசிய அவர், "என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள அணியின் கோச்சுகளிடம் பேசி, நெட்ஸ் பயிற்சியில் கடுமையாக உழைத்தேன். இன்று களமிறங்கிய போது மனதில் பெரிதாக எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், முதல் 10 ஓவர்களை எப்படி நமக்கு சாதகமாக பெஸ்ட்டா பயன்படுத்திக்கணும் என்பதில் மட்டுமே தெளிவாக இருந்தேன். நான் நினைத்த பிளான் இன்று சரியாக எக்ஸிகியூட் ஆனதால், ரிசல்ட்டும் தானாகவே பாசிட்டிவாக வந்தது," என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.