'தமிழ்கொடுத்த பொருளைத் தமிழருக்குத் தருகிறோம்' - தன் பிறந்த நாளில் வைரமுத்து செய்த உதவிகள்

By subhashini · 14/7/2024

தன்னுடைய பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து செய்திருக்கும் உதவிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. ‘நிழல்கள்’ என்னும் திரைப்படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இதுவரை வைரமுத்து அவர்கள் 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். மேலும், இவர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதிலும், முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும் வைரமுத்து வாங்கி இருக்கிறார்.

வைரமுத்து குறித்த தகவல்:

இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய துறையிலுமே ஆளுமை படைத்தவராக விளங்குகிறார். அதுமட்டுமில்லாமல் கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாடு பாடநூல் மட்டுமல்லாமல் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கூட பாடங்களாக இடம்பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. சிங்கப்பூர் அரசின் கல்வி திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'மரங்களைப் பாடுவேன்' என்ற கவிதை தமிழ் பாடமாகவே இடம்பெற்றிருக்கிறது.

வைரமுத்து பிறந்தநாள்:

மேலும், 'சின்ன சின்ன ஆசை' என்ற பாடல் மலையாள மண்ணில் இன்றைக்கும் ஒரு தாலாட்டாக இருக்கின்றது. இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் 71-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருந்தார்கள். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் வைரமுத்து அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார்கள்.

வைரமுத்து பதிவு:

இது தொடர்பாக இவர் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், தமிழ்க்கொடுத்த பொருளை தமிழருக்கு தருகிறோம் என்று குறிப்பிட்டு,

நேற்று என் பிறந்தநாள்

கவிஞர் தோட்டம்
நிகழ்விடமனது

என்ன அன்பு

எவ்வளவு ஆசை

அழைப்பிதழ் தயாரிக்காத போதே
பிதுக்கி எடுத்தது பெருங்கூட்டம்

பழ.புகழேந்திக்குக்
கவிஞர்கள் திருநாள் விருது

ரூபாய் 25ஆயிரம்

நலிவுற்ற குடும்பத்து
மாணவர் ஐவருக்கு
ஒரு லட்சம் கல்வித்தொகை

பெரியகுளம்
நூற்றாண்டு நூலகத்துக்கு
ஒரு லட்சம் தொண்டுத் தொகை

பொருள் பெற்றோர்
புன்னகையை விடவும்
பொருள் ஒன்றும் உயர்ந்ததில்லை

தமிழ்கொடுத்த பொருளைத்
தமிழர்க்குத் தருகிறோம்

இவ்வுறவை யான்பெறவே
என்னதவம் செய்துவிட்டேன்! என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full