பாடல்கள் வரிகள் சர்ச்சை : பழி என்மீதே வருகிறது, நான் என்ன செய்ய? வேதனையில் கவிஞர் வைரமுத்து சொன்னது

By subhashini · 19/6/2025

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து பல பெண்களுக்கும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள்.
அதன் பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இதற்கு பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து இருந்தார்கள். இருந்தாலும், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் தன்னுடைய பல்லவி கூட அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக கவிஞர் வைரமுத்து பதிவு போட்டு இருந்தார்.

வைரமுத்து பதிவு:

அதில் அவர், என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா, பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கையில பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்

பாடல் காப்பி சர்ச்சை:

இப்படி இன்னும் பல சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன் ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் என்னைக் ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்று எழுதி இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று தன்மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக வைரமுத்து பதிவு என்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்மீது ஒரு பழிஉண்டு பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்.

வைரமுத்து பதிவு:

புன்னகை மன்னன் படத்தில் ‘வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்’ என்றொரு பாட்டு. மழையில் நனையும் ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையைக் குளிப்பாட்டும் பாட்டு. ‘மழைத்துளி தெறித்தது, எனக்குள்ளே குளித்தது, நினைத்தது பலித்தது, உயிர்த்தலம் சிலிர்த்தது’ என்று எழுதியிருந்தேன். ‘உயிர்த்தலம் என்பதை மட்டும் மாற்றிக்கொடுங்கள்’ என்றார் இசையமைப்பாளர். ஏன் என்றேன்? ‘நீங்கள் எழுதிய பொருளில் புரிந்துகொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்திப் பிரச்னை செய்வார்கள்’ என்றார். சிந்தித்தபோது சரியென்றே பட்டது. நான் உடனே ‘நினைத்தது பலித்தது, குடைக்கம்பி துளிர்த்தது’ என்று மாற்றிக்கொடுத்தேன். இதில் நியாயம் இருக்கிறது. இன்னொரு படம் மனிதன். அதில் ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்’ என்றொரு பாடல்.

பாடல் வரிகள் பற்றி சொன்னது:

“குரங்கிலிருந்து பிறந்தானா, குரங்கை மனிதன் பெற்றானா, யாரைக் கேள்வி கேட்பது, டார்வின் இல்லையே” என்று எழுதியிருந்தேன். இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் உதவியாளர் லட்சுமி நாராயணன் என் காதோடு வந்து, ‘டார்வின் என்பதை மட்டும் மாற்றுங்கள்; அது எல்லாருக்கும் புரியாது’ என்றார். நான் புன்னகையோடு சொன்னேன்: ‘தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு; தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதும் பாட்டு’ என்று மாற்ற மறுத்துவிட்டேன். எஸ்.பி.முத்துராமனிடம் சென்று நான் சொன்னதைச் சொல்லியிருக்கிறார். அவரும் இதற்குமேல் வற்புறுத்த வேண்டாம் என்று வருத்தத்தோடு விட்டுவிட்டார். டார்வின் பேசப்பட்டது. இப்படி நியாயமான பொழுதுகளில் மாற்ற மறுத்திருக்கிறேன். பாட்டுவரியின் திருத்தத்தைப் பொருளமைதியே தீர்மானிக்கிறது; நானல்ல. ஆனால் பழி என்மீதே வருகிறது. என்ன செய்ய?" என்று கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full