நன்றி, வணக்கம் என்பதற்கு அர்த்தம் இதுதான் - 800 பட சர்ச்சைக்கு விஜய்சேதுபதி பளீர் பேட்டி

By Rajkumar · 19/10/2020

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவானவர் எனக்கூறி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

https://twitter.com/VijaySethuOffl/status/1318126679445950464

அதில், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.என் மீது உள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவது நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்வு அடைவதில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்று இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணிய எனது சுய சரிதையை திரைப்படமாக சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கிறது நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ளார். அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய சூழலில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். முத்தையா முரளிதரனின் இந்தஅறிக்கைக்கு பதிலளித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, ``நன்றி.. வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகினாரா இல்லையா என்பதை தெளிவாக சொல்லவில்லை.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காலமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் தாயாருக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று தன்னுடைய இரங்கலை தெரிவித்தார். அஞ்சலி செலுத்த வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இனி ‘800’ படம் குறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார் விஜய் சேதுபதி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full