நாளை முதல் கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் - கட்சி கொடி சம்மந்தமாக விஜய் வெளியிட்ட அறிக்கை

By subhashini · 21/8/2024

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றும் விழா சார்பாக விஜய் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றி கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியை உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

விஜய் அரசியல்:

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை வரும் 22-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக கூறியிருந்தார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலுமே கொடியேற்றும் விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதோடு சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்து இருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் விஜயின் கட்சிக் கொடி குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜயின் கட்சி கொடி ஏற்றும் விழா:

மேலும், பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5000 பேர்களை வைத்து கட்சி கொடியை ஏற்ற பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் கட்சி கொடி ஏற்றும் விழாவிற்கு அனுமதி கேட்டு போலீசாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஏ. ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த போது கடும் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகி இருந்தார்கள்.

அனுமதி மறுத்த காரணம்:

இந்த காரணத்தினால் காவல்துறை விஜயின் கட்சி கொடி ஏற்றும் விழா நடத்த அனுமதி மறுத்து இருக்கிறது. அதோடு உங்கள் கட்சி அலுவலகத்திலேயே கொடியேற்றும் விழாவை வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் விஜய், தன் கட்சி அலுவலகத்தில் 250- 300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசை ஆகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது பெரும் வரம்.

விஜய் வெளியிட்ட அறிக்கை:

அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழக கொடி பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full