விஜய் கட்சியில் யாருக்கு என்ன பதவி? நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

By Arun · 12/5/2024

தமிழ் சினிமாவில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை.

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார்.

தமிழக வெற்றி கழகம் :

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், விஜய் அவர்கள் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விஜய் உத்தரவின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதுக்காக சிறப்பு செயலி ஒன்று வெளியிடப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்களை சேர வைத்து வருகின்றனர்.

யார் யாருக்கு என்ன பொறுப்பு :

கட்சி துவங்கிய சிறிது நாட்கள் விஜய்யின் கட்சி குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக கட்சியின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. ஆனால், முக்கிய விஷயங்களுக்கு அறிக்கை மட்டும் வெளியிட்டு வருகிறார் விஜய். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் நிர்வாகிகள் பெயர் அடங்கிய பொது நோட்டீஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் :

அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கு யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full