சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. தனுஷின் ‘புதுப்பேட்டை’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’ போன்ற சில படங்களில் மிக சிறிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு வெளி வந்த ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற படத்தில் தான் விஜய் சேதுபதி முதல் முறையாக ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ என அடுத்தடுத்து மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்தார். இம்மூன்று படங்களுமே அவரின் நடிப்புக்கு செம லைக்ஸ் போட வைத்தது.

Advertisement

அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. ‘சூது கவ்வும்’ படத்துக்கு பிறகு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், நானும் ரௌடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம், 96, பேட்ட, சூப்பர் டீலக்ஸ்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ‘மக்கள் செல்வன்’ ஆனார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், அகில இந்திய இந்து மகாசபா, நடிகர் விஜய் சேதுபதி மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரில் “தற்போது, சமூக வலைத்தளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.03.2019 அன்று ஒளிபரப்ப பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப் படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது இந்து மதத்தினையும், அதன் வழிபாடு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதினையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார்.

Advertisement

அந்நிகழ்ச்சியின் நோக்கமே, குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி? என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதில் இந்து மதக் கோயில்களின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றி கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா? ஆகையால், அய்யா அவர்கள் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement