உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வந்த 'சிறை' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம் பிரபு. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சிறை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் லலிதா குமார் தயாரித்திருக்கிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கும் சிறை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ விக்ரம் பிரபு காவல் துறையில் அதிகாரியாக இருக்கிறார். சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேலையைத்தான் விக்ரம் பிரபு செய்கிறார். இதில் ஒரு முறை ஒன்பது கொலை செய்த ஒருவன், விக்ரம் பிரபுவிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். தன்னுடைய கையில் உள்ள துப்பாக்கியை வைத்து விக்ரம் பிரபு அந்த கைதியை சுட்டு விடுகிறார். அந்த கைதியும் இறந்து விடுகிறார்.
இதனால் விக்ரம் பிரபு மீதும் அவருடன் சென்ற மற்ற இரு போலீசார்கள் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிற இன்னொரு பக்கம் 5 வருடங்களாக சிறையில் இருக்கும் அப்துல் ரகுப் என்பவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. விக்ரம் பிரபு மற்றும் இரண்டு போலீசார் இணைந்து அப்துலை அழைத்து செல்கிறார்கள். அப்போது விக்ரம் பிரபுவுக்கும் அப்துலுக்கும், இடையே பேச்சு வார்த்தை நடக்கிறது.
பின் டீ குடிப்பதற்காக பேருந்தை ஓரிடத்தில் நிறுத்துகிறார்கள். அப்போது போலீஸ் ஒருவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட, அதை விக்ரம் பிரபு தடுக்க செல்கிறார். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட அப்துல், போலீஸ் துப்பாக்கி எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து விடுகிறார். அழைத்து வந்த கைதியை தொலைத்து விட்டோம் என்ற அதிர்ச்சியில் விக்ரம் பிரபு உறைந்து போயிருக்கிறார். பின் விக்ரம் இதைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போகும்போது அப்துல் அங்கு இருக்கிறார்.
தப்பித்தவன் மீண்டும் கிடைத்து விட்டான் என்று விக்ரம் பிரபு நிம்மதி அடைகிறார். அதற்கு பிறகு தான், தான் யார் என்பதை அப்துல், விக்ரம் பிரபுவிடம் சொல்கிறார். அப்துல் யார்? அவர் எதற்காக கைது செய்யப்பட்டார்? ஐந்தாண்டுகள் சிறையில் இருந்ததுக்கான காரணம் என்ன? தப்பித்துவிட்டு மீண்டும் எதற்காக அப்துல் வந்தார்? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் இயக்கி இருக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ் தான் உண்மை இல்லை என்பதை இயக்குனர் சொல்லிவிடுகிறார்.
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையை பதட்டத்துடன் இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். அறிமுக இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு இயக்குனர் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். அதோடு கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் படத்திற்க்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். இந்த படம் விக்ரம் பிரபுவுக்கு ஒரு மாஸ் கம்பேக் படமாக இருக்கும்.
இவரைத் தொடர்ந்து படத்தில் வரும் அறிமுக நடிகர்கள் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் கதையைக் கொண்டு செல்லும்போது ஒரு இடத்தில் கூட தொய்வை ஏற்படுத்தவில்லை. ஃப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பதற வைக்கிறது. குறிப்பா கிளைமாக்ஸ் காட்சிகள் கண் கலங்க வைத்திருக்கிறது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம்.
அதேபோல் படத்தின் வசனங்களும் நன்றாக இருக்கிறது. படத்தில் இந்து முஸ்லிம் குறித்து பேசப்பட்ட கருத்துக்கள், தமிழர்களுக்காக ஈழத்தின் முதல் ஆளாக தீக்குளித்தவர்களின் பெயர்களை சொல்லும் காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை, பாடல்கள் ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் சிறை இருக்கிறது.
நிறை:
விக்ரம் பிரபு நடிப்பு அருமை
இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது
கதைக்களம் அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் காட்சி சூப்பராக இருக்கிறது
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது
வசனங்கள் அருமை
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் சிறை - அழகிய பயணம்