கருப்பு பட தயாரிப்பாளர் செய்த உதவியை மறக்க மாட்டேன் - நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி பதிவு
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. பல பிரச்சினைகளைத் தாண்டி நேற்று கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.
மேலும், முதல் நாளில் இந்த படம் கிட்டத்தட்ட 20.66 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பக்கா விருந்தாக ரசிகர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் செய்யும் தமிழ் திரைப்படமாக கருப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
கருப்பு படம்:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஷால் கருப்பு படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய அன்பு நண்பர் எஸ் ஆர் பிரபு. இரும்புத்திரை படம் மே 11ஆம் தேதி வெளியாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ் ஆர் பிரபு.
என்னுடைய படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்பதற்காக காலை 7:00 மணிக்கே அவர் எனக்கு அளித்த உதவியை நான் என்னுடைய வாழ்நாளிலும் மறக்க மாட்டேன்.
விஷால் பதிவு:
இந்த மாபெரும் வெற்றிக்கு நீங்கள் முழுமையாக தகுதியானவர். இதே உறுதியுடன் நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுங்கள். நண்பரே எங்களை போலவே நீங்களும் ஒரு மிகச்சிறந்த வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து நிரூபிப்பீர்கள். இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியான நடிகர் சூர்யா. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய அப்பன்களான கருப்பன்சாமிக்கும், வீரபத்திர சாமிக்கும் என்னுடைய நன்றிகள். மார்க் ஆண்டனி படத்தின் மூலம் என்னை மீண்டும் என் காலில் நிற்க வைப்பதற்காக நீங்கள் வெளிப்படுத்திய அந்த சக்தி அளப்பரியது.
படம் பற்றி சொன்னது:
இந்த படத்தையும் நீங்கள் ஆசிர்வதித்ததற்கு நன்றி. பாடல் அல்லது சண்டை காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தபோது படப்பிடிப்பின் நடுவில் நான் அருள் வந்து ஆடிய அந்த சம்பவத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த படத்தின் இயக்குனர் மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள். கொல்கத்தாவில் இப்படம் வெளியானால் அதை இங்கே காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இல்லை எனில் நான் சென்னை திரும்பும் வரை அந்த ஆவல் என்னுள் அப்படியே நிறைந்திருக்கும். இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி இருக்கிறார்.