யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் சுவை கொடுத்ததா? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு.
தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் சட்னி சாம்பார். இதை இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருக்கிறார். இதில் வாணி போஜன், மைனா நந்தினி, நிழல்கள் ரவி, சார்லி, இளங்கோ குமரவேல், நிதின் சத்யாஉட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் . முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஊட்டியில் 'அமுதா கஃபே' என்ற பாரம்பரிய உணவகத்தை நிழல்கள் ரவி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீரா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். மகளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. மகன் கயல் சந்திரமவுலி தன்னுடைய மச்சானுடன் சேர்ந்து மசாலா பொடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஜென்சி என்பவரை காதலிக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணுடைய வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.
இதற்கு இடையில் நிழல்கள் ரவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு ரொம்பவே மோசமான நிலையில் இருக்கிறார். அந்த சமயத்தில் தான் இவர் தன்னுடைய மகன் கயல் சந்திராவிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில் அவர், எனக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணுடன் உறவில் இருந்தேன். அதன் மூலம் எனக்கு ஒரு மகனும் பிறந்தான். அவனை எப்படியாவது நான் பார்க்க வேண்டும். இதை நிறைவேற்றி வைப்பாயா? என்று கேட்கிறார்.
அதற்கு கயல் சந்திரன் ஒத்துக் கொள்கிறார். அவர் தான் படத்தின் நாயகன் யோகி பாபு. அவரை தான் கயல் சந்திரமௌலி சந்தித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். யோகி பாபுவுக்கு தன் தந்தை என்றாலே பிடிக்காது. இருந்தாலும், எப்படியோ சமாளித்து கயல் சந்திரன் அழைத்து வருகிறார். அதற்குப் பின் என்ன நடக்கிறது? நிழல்கள் ரவியை தன் அப்பாவாக ஏற்றுக் கொண்டாரா? யோகி பாபுவை நிழல்கள் ரவி குடும்பம் ஏற்றுக் கொண்டதா? என்பது படத்தின் மீதி கதை.
படத்தில் நாயகன் யோகி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி காட்சிகளிலும் சிரிக்க வைத்திருக்கிறார். இவரை அடுத்து வாணி போஜன் உடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. இவருடைய சில காட்சிகளும் கைதட்டலை கொடுத்திருக்கிறது. பொறுப்பான மகனாக கயல் சந்திரமவுலி நடித்திருக்கிறார். இவரை அடுத்து காமெடியிலும், கதாபாத்திரத்திலும் நிதின் சத்யா நன்றாக செய்து இருக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் மைனா நந்தினியும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்கிறார்கள். குறிப்பாக, எமோஷனல் காட்சிகளில் சார்லி ஸ்கோர் செய்திருக்கிறார். படத்தில் இயக்குனர் பீல் குட் காமெடிகளை நிறையவே காண்பித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். இது சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் சில சீரியசான காட்சிகளையும் காமெடியாக கொடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
அதோடு சில உருவ கேலி வசனங்களும் கடுப்பை ஏற்றி இருக்கிறது. படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்களும் பெரிதாக பார்வையாளர்களை கவரவில்லை. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாகத்தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை ஓகே
காமெடி கதைக்களம்
குறை:
சில தேவையற்ற வசனங்களை நீக்கியிருக்கலாம்
சில தேவையில்லாத கதாபாத்திரங்களையும் தவிர்த்திருக்கலாம்
இயக்குனர் கதை களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
பாடல்கள் பெரிதாக ஒரு செட் ஆகவில்லை
மொத்தத்தில் சட்னி சாம்பார்- ருசி குறைவு