சாமி விஷயம், முன்னோர்களுக்கு முன்பு வந்தது - கையில் கயிறு குறித்த கோள்விக்கு யோகி பாபு கொடுத்த நச் பதில்
கையில் கயிறு, காப்பு கட்டியதற்கான காரணம் குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு யோகி பாபு கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளைப் பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு யோகி பாபு நடிப்பில் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘போட்’.
யோகிபாபு குறித்த தகவல்:
இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், யோகி பாபு அவர்கள் வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஸ்கூல்’. இந்த படத்தை இயக்குனர் ஆர்.கே வித்யாதரன் இயக்கியிருக்கிறார்.
யோகிபாபு படங்கள்:
இவரே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, யோகி பாபு அவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நிறைய கோவில்கள் சென்று இருக்கிறார். இவர் ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் பக்தி மயமாகத்தான் இருப்பார். அதோடு படம் முடிந்து கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார்.
யோகிபாபு ஆன்மீகம்:
சமீபத்தில் கூட இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். அதேபோல் இவர் திருச்செந்தூர், திருத்தணி என பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். ஆன்மீகத்தில் ரொம்ப ஆர்வம் உடைய இவர் ஒரு ஒவ்வொரு படத்திற்கும் முன்பும், பின்பும் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். அதோடு இவர் தன்னுடைய கைகளில் நிறைய நிறங்களில் கயிறுகளும், காப்பும், தாயத்தும் கட்டி இருக்கிறார்.
யோகிபாபு கொடுத்த பதிலடி:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நாளுக்கு நாள் உங்களுடைய கையில் கயிறு அதிகமாக இருக்கிறது. என்ன காரணம்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு யோகி பாபு, இது சாமி விஷயம். இது சம்மந்தமில்லாத கேள்வி. நீ இல்லை, நான் இல்லை. நம் முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம். இதைப் பற்றி பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.