மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கை- காரணம் என்ன?

By Rajkumar · 22/10/2024

பிரபல யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக சினிமா நடிகர்களை விட ட்ரெண்டிங்கில் உள்ளவர்கள் யூடியூபர்கள் தான். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகர் இர்ஃபானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவுகளின் டேஸ்ட் குறித்தும், தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்குச் சென்று பல ஹோட்டல்களில் சாப்பிட்டு அதற்கான ரிவ்யூகளை பகிர்ந்து கொள்வார். அதோடு இவர் எப்போதும் அரை ட்ரவுசர் போட்டுக் கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகளில் உள்ள காஸ்ட்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கூட கிடைத்திருக்கிறது.

இர்ஃபான் குறித்து:

மேலும், இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து முடிவு செய்த இந்த திருமணம் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான யூடியூபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சியில் இர்ஃபான் கலந்துகொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்:

இதனிடையே இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் இர்ஃபான் துபாய் சென்று இருந்தார். அங்கு கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியின் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டார். இதனை வைத்து ஜெண்டர் ரிவில் வீடியோவை இர்ஃபான் வெளியிட்டு இருந்தார். இதற்கு இவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

ஜெண்டர் ரிவில் சர்ச்சை:

அதோடு மருத்துவ கவுன்சில் இர்ஃபான் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலர் கூறிய நிலையில், அதற்கான நோட்டீசும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், இந்த சம்பவத்திற்கு இர்ஃபான் மன்னிப்பு கேட்டு, அவர் பதிவிட்டிருந்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இருந்தார். இந்த சர்ச்சை ஓய்ந்து சில மாதங்களே ஆன நிலையில், தற்போது அதே குழந்தை விவகாரத்தை வைத்து புதிய சர்ச்சை ஒன்றில் இர்ஃபான் சிக்கியுள்ளார்.

மீண்டும் சர்ச்சையில் இர்ஃபான்:

சமீபத்தில் இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் தன் மனைவியின் பிரசவ நிகழ்வை வீடியோவாக பதிவு செய்தை வெளியிட்டு இருந்தார். அதில் மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் தான் வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் இர்ஃபான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்து விசாரித்த நிலையில், தற்போது அந்த வீடியோவை தனது சேனலில் இருந்து இர்ஃபான் நீக்கியுள்ளார். அந்த வீடியோவை அதற்குள்ளாக சுமார் 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full