கடந்த சில தினங்களாக தமிழகத்தையே புரட்டி போட்டு கொண்டு இருக்கும் சம்பவம் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தான். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) அவரது பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலை அருகே ஏபிஜே செல்போன் கடை வைத்திருந்தார்கள். இவர்கள் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரிகள் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கி உள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அநியாயமாக உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தச் சம்பவத்திற்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் அவர்கள் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களிடம் பவ்யம் காட்டி சலாம் போடும் ஒரு சில காவல் துறையினர் சாமானிய மக்களிடம் அத்துமீறி அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்.

Advertisement

இவர்களுக்கு பக்கபலமாக சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிறைத்துறை அதிகாரிகளும் தங்களின் கடமைகளை மறந்து உறுதுணையாக நிற்கிறார்கள். இதற்கு அவர்களுக்குச் சட்டம் தெரியாதது மட்டுமில்லை. அப்படியே அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அரசியல்வாதிகளின் தயவால் சட்டத்தை தம் பக்கம் வளைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் தான் இம்மாதிரியான செயலுக்கு காரணம். சாத்தான் குளத்தில் இது தான் தற்போது நடந்து உள்ளது. குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் கைது செய்து அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்துவதுதான் நம் வேலை என்பதை இவர்கள் மறந்து பல காலங்களாகிவிட்டன.

சாத்தான் குளம் படுகொலைகளுக்குப் பின்பு காவல்துறையின் மிக உயர்ந்த பொறுப்புக்களில் இருக்கும் பல நேர்மையான அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இருவரின் ஆத்மாவும் கருணை மிகுந்த இயேசுபிரானின் நிழலில் அமைதியடையவும், அவர்களின் குடும்பத்தினரும், சொந்தபந்தங்களும், நண்பர்களும், மீள முடியாத வேதனையிலிருந்து மீண்டு வரவும், இந்தப் படுகொலைகளுக்கு நீதி வேண்டியும், எல்லாம் வல்ல இறைவனிடம் கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement