தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை மன்னனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் செந்தில். செந்தில், கவுண்டமணி இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் காமெடிகள் எல்லாம் வேற லெவல். அதிலும் இவருடைய வாழைப்பழம் காமெடி தற்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் கூட வரவேற்கப்பட்டு வருகிறது. தற்போது இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் 23 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயமும் செய்து வந்திருக்கிறார். இது பற்றி பலருக்கும் தெரியாது. 2016 ஆம் ஆண்டு சென்னையை புரட்டிப்போட்ட வர்தா புயலில் செந்திலின் 5 ஏக்கர் விவசாய நிலமும் பெரிதும் பாதிப்படைந்தது.

செந்திலின் விவசாயத் தோட்டம்

தற்போது நடிகர் செந்தில் அவர்கள் மீண்டும் விவசாயத்தில் தீவிரமாக இறங்கப் போவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னாடி ஊரில் முழுநேரம் விவசாயம் தான் செய்து கொண்டிருந்தேன். சினிமாக்கு வந்தாலும் நான் விவசாயத்தை விடவில்லை. சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சென்னையில் 5 ஏக்கரில் நிலம் வாங்கிப் போட்டேன். அதில் 1993 ஆம் ஆண்டிலிருந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.

Advertisement

ஆடு, மாடு, கோழி, விவசாயம் என்று என்னுடைய வாழ்க்கை நன்றாக போனது. கால்நடைகளின் சாணத்தை மட்க வைத்து செடிகளுக்கு உரமாக தான் போடுவேன். எந்த ஒரு ரசாயன உரங்களையும் நான் பயன்படுத்த மாட்டேன். என் தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு இருக்கு. அதிலிருந்து தான் என்னுடைய விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்திக் கொள்வேன். கோடை காலத்தில் கூட என்னுடைய கிணற்றில் தண்ணீர் இருக்கும்.

ஆனால், 2016 இல் சென்னையில் வந்த வர்தா புயலால் என்னுடைய விவசாயத் தோட்டம் கடுமையாக சேதமடைந்தது. மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்து விட்டது. அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பின் கீழே விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்த பல லட்ச ரூபாய் செலவாகும் என்று சொன்னார்கள். இதனால் சில பிரச்சனைகளும் வந்தது. ஒரு கட்டத்தில் எனக்கு காசு வேணாம் மரங்களெல்லாம் சும்மாவே எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொன்னேன்.

Advertisement

அதற்கு பிறகும் யாரும் வரவில்லை. அதனால் அந்த மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் இப்ப வரை அப்படியே இருக்கிறது. புல், எருக்கஞ்செடி, முள்செடி நிறைய வளர்ந்து என்னுடைய தோட்டம் காடாக மாறி வளர்ந்து விட்டது. தற்போது என் தோட்டத்தைப் பார்க்க எனக்கு மிகவும் மன வேதனை அளிக்கிறது. தற்போது நான் மீண்டும் இயற்கை விவசாயத்தை செய்ய முடிவு எடுத்து இருக்கிறேன். லாக் டவுன் முடிந்த பிறகு அதற்கான வேலைகளை செய்ய தொடங்குவேன் என்று உற்சாகத்துடன் கூறினார்.

Advertisement
Advertisement