ஹேமா கமிட்டி குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை உடன் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், அம்மா அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் விளக்கம் கொடுத்தார்.
பிரபலங்கள் புகார்:
இதை அடுத்து பல நடிகைகள் பிரபலங்கள் மீது புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதோட சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய அளவில் இந்திய திரை உலகில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா, கேரவனில் கேமராவை வைத்து பெண்களை தவறாக வீடியோ எடுத்து பார்க்கிறார்கள் என்றெல்லாம் கூறியிருந்தது மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி:
இதை அடுத்து போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவை தொடர்ந்து தமிழிலும் இது போன்ற பாலியல் தொல்லை நடக்கிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால், இதற்கு இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் யாருமே சரியான பதில் கூறாமல் மௌனம் காத்து வருகிறார்கள். இதுவே பலருக்கு சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் திரை உலகில் பாலியல் தொல்லை நடக்கவில்லை.
தமிழ் சினிமா குறித்து சொன்னது:
நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் நடித்திருக்கிறேன். இதுவரைக்கும் எந்த ஒரு துன்புறுத்தலும் எனக்கு நடக்கவில்லை. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. தமிழ் திரைகளிலும் இது போன்று எதுவும் நடக்கவில்லை. அதனால் தான் ஹேமா கமிட்டி போல ஒரு கமிட்டி தமிழுக்கு தேவை இல்லை. ஒருவேளை தமழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அதற்கு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ரொம்ப முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.