ஹிப் ஹாப் இசையமைப்பாளராக வலம் வந்த ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த சிவகுமாரின் சபதம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆதி அன்பறிவு என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி இருக்கிறார். மேலும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் டபுள் ஆக்சன் திரைப்படமாக அன்பறிவு படம் உள்ளது. இந்த படம் இன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், ஆஷா சரத், சாய்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

Advertisement

கதைக்களம்:

மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நெப்போலியன் மக்கள் செல்வதோடு வாழ்ந்து வருகிறார். அவரிடம் உதவியாளராக பணிபுரிகிறார் விதார்த். அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் விதார்த். சாய்குமார் நெப்போலியன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். பின் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. இப்படி ஒரு நிலையில் விதார்த்துக்கு கிடைக்க வேண்டிய பதவி நெப்போலியன் மருமகன் சாய்குமார் கிடைக்கிறது. இதனால் ஆத்திரமடையும் விதார்த் நெப்போலியன் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார். படத்தில் அன்பு, அறிவு என்ற இரட்டை வேடத்தில் ஆதி நடித்திருக்கிறார்.

இவர் குழந்தையாக இருந்தபோதே குடும்ப பிரச்சினையால் பிரிந்து விட்டார்கள். அன்பு தனது தாயார் லட்சுமி மற்றும் தாத்தா முனியாண்டி ஆகியோருடன் சேர்ந்து ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட முரட்டுத்தனமான மனிதராக வளர்கிறார். அறிவு தன்னுடைய தந்தை பிரகாசத்துடன் கனடாவில் வசதியாக நல்ல படித்த இளைஞனாக வருகிறார். பின் பகையின் காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்பம் பிரிந்தது என்று தெரிந்தவுடன் அறிவு குடும்பத்தை இணைக்க போராடுகிறார்.

Advertisement

அறிவு தன்னுடைய குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்ந்தாரா?அன்பு -அறிவு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஆக்ஷன் காட்சிகள், ஸ்லோ மோஷன் காட்சிகள் என பல விஷயங்களை இயக்குனர் நேர்த்தியாக செய்திருக்கிறார். குடும்ப உணர்வு, அதனுடைய மதிப்புகள், அன்பு, பாசம் என்ற பாணியில் கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். படத்தில் மதுரைக்காரர்கள் பெருமையையும், அவர்களுடைய பாடி லாங்குவேஜ், சண்டை, வம்பிழுக்கும் காட்சிகள் போன்ற விஷயங்களை எல்லாம் அழகாக காண்பித்திருக்கிறார்.

Advertisement

ஆனால், ஒரு மணி நேர கதையை மூன்று மணி நேரம் இழுத்திருப்பது கடுப்பேற்றி இருக்கிறது. படத்தில் ஆதி போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பேசி இருக்கிறார். வழக்கம் போல அண்ணன்– தம்பி பிரச்சினையை தான் 3 மணி நேரம் இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். பழைய கதையாக இருந்தாலும் கொஞ்சம் மாற்றியிருந்தார் ரசிகர்களும் ரசிக்கும்படியாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அன்பறிவு படத்தில் பல காட்சிகள் பழைய படங்களின் சாயல் வந்திருப்பதாக கூறப்படுகிறது என்பது பார்வையாளர்கள் கருத்து.

வில்லனாக வரும் விதார்த் வழக்கமான படங்களை விட இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். ஆதி இரண்டு வேடத்தில் நடித்திருப்பது பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஆனால், இரண்டு கதாபாத்திரங்களை வேறுபடுத்தி இருப்பதற்கு கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் பல இடங்களில் அன்பு, அறிவு ஒரே மாதிரியாக தெரிகிறது. வழக்கம்போல் நெப்போலியன் தன் உடைய கம்பீரமான தோற்றம், அனுபவ நடிப்பால் அசத்தி இருக்கிறார். அதோட பின்னணி இசை படத்திற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய திரைக்கதை, படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் படம் முழுமையான பக்க என்டர்டைன்மெண்ட் படமாக அமைந்திருக்கும்.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

ஆதி இரட்டை வேட நடிப்பு நன்றாக இருக்கிறது.

குறைகள் :

வழக்கமான அண்ணன் தம்பி பாசத்தை காட்டி இருக்கிறார்கள்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் நன்றாக இருக்கும்.

வழக்கமான மாவையே அரைத்து இருக்கிறார் இயக்குனர்.

ஒரு மணி நேர கதையை மூன்று மணி நேரம் எடுத்து சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் சளிப்படைய செய்து இருக்கிறது.

இறுதி அலசல் :

அன்பறிவு ஒன்றும் புதிதான கதை இல்லை பல ஆண்டுகள் வந்த அதே பழைய கதை தான். உதாரணமாக உத்தமபுத்திரன், வேல், வந்த ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களின் லிஸ்டில் இந்த படத்தை சேர்க்கலாம். மொத்தத்தில் அன்பறிவு – அன்பு, அறிவு இரண்டுமே முக்கியம் என்பதை காட்டி விட்டது. குடும்ப ரசிகர்களை மட்டுமே ஒரு படம். சீரியல் பார்ப்பவர்களுக்கு நல்ல தேர்வு தான்.

Advertisement