பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனியின் திருமண புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிக் பாஸ் கவினின் நெருங்கிய நண்பரும் ஆவார். நடிகை அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘அருவி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரதீப் நடித்திருந்தார்.

மேலும், சிவகார்த்திகேயன் தயாரித்த ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக பிரதீப் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது கவின் நடிப்பில் வெளிவந்த ‘டாடா’ திரைப்படம் தான். இந்த படத்தில் பிரதீப்பின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது. அதோடு இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருக்கிறார். இவருக்கு நடிகர் ஆகுவதை விட இயக்குனர் ஆவதில் தான் அதிக ஆர்வம். அதற்காக இவர் பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்.
பிரதீப் ஆண்டனி குறித்து:
அதற்குப் பிறகு தான் இவருக்கு ‘பிக் பாஸ் 7’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடியிருந்தார். இடையில், இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங் குற்றம் சாட்டியதால், எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரதீப்:
இதனால், பிரதீப்பின் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியையும், தொகுப்பாளர் கமலையும் வறுத்தெடுத்திருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தான் பிரதீப்புக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உருவாகி இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவுக்கும் கூட பிரதீப் வரவில்லை. அதனால் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வராதது, எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பிரதீப் ஆண்டனி நிச்சயதார்த்தம்:
அதற்குப் பிறகு பிரதீப் நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக இருந்தாலும், கடந்த ஜூன் மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர், தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணைத்தான் நிச்சயதார்த்தம் செய்திருந்தார். ஆனால், இவரின் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் இன்று பிரதீப் ஆண்டனியின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பூஜாவை தான் திருமணம் செய்து இருக்கிறார்.
Happy Married Life 💍 😇 #Pooja ❤️ #PradeepAntony #BiggBossTamil pic.twitter.com/RfBrSsQywl
— Aadhavi (@classicparky) November 7, 2024
பிரதீப் ஆண்டனி திருமணம்:
அதோடு இதில் என்ன ஸ்பெஷல் என்றால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தான் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். தற்போது அதே வாரத்தில் அதுவும் கமலினுடைய பிறந்தநாள் அன்று இவருக்கு கல்யாணமும் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கிறிஸ்தவ முறைப்படி தான் பிரதீப் ஆண்டனி-பூஜா திருமணம் நடைபெற்று இருக்கிறது. தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






